கல்வெட்டில் தேவார மூவர்
கல்வெட்டில் தேவார மூவர், கா.ம.வேங்கடராமையா, சேகர் பதிப்பகம்
சைவ மரபில் தேவார மூவருக்கு மிகுந்த முக்கியத்துவம் உண்டு. அன்றாட வழிபாட்டில் மூவர் தேவாரப் பாடல்களைப் பாடுகிறவர்கள் ஏராளம். அநேகமாக எல்லா சிவ ஆலயங்களிலும் நாவல்வர் திருவுருவச்சிலைகளை அமைத்து வழிபடுகிறார்கள்.
‘கல்வெட்டில் தேவார மூவர்’ என்ற பேராசிரியர் கா.ம.வேங்கடராமையாவின் நூலைப் படிக்கும்போது, பல நூற்றாண்டுகளுக்கு முன்னர் வேரூன்றிய மரபு இது என்று புரிகிறது. தமிழகமெங்கும் பக்தர்களும் மன்னர்களும் தேவார மூவரை எப்படிக் கொண்டாடியிருக்கிறார்கள் என்பதை விளக்குகிறது இந்நூல்.
குறிப்பாக, இந்நூலில் வரும் பெயர்கள் அனைத்தும் நம்மை வியப்பில் ஆழ்த்துகின்றன. அழகிய தமிழ்ப்பெயர்கள், பொருளுள்ள பெயர்கள், இறைவன் பெயர்கள் தேவார மூவருடைய வாழ்க்கையில் நிகழ்ந்த பல்வேறு அம்சங்களைச் சுட்டிக்காட்டும் பெயர்கள், அவர்களுடைய தேவார வரிகளை அப்படியே எடுத்தாண்ட பெயர்களையெல்லாம் மக்களுக்கு, ஊர்களுக்கு, மகுடங்களுக்கு, குகைகளுக்கு விரும்பிச் சூட்டியிருக்கிறார்கள்.
ஒவ்வொரு பெயருக்கும் பின்னணி, அது எந்த கல்வெட்டில் இடம் பெற்றுள்ளது, எவ்வாறு குறிப்பிடப்பட்டுள்ளது, அந்தக் கல்வெட்டு அமைந்துள்ள இடம் எது என்றெல்லாம் மிக விரிவான விவரங்களுடன் எழுதியிருக்கிறார் பேராசிரியர் கா.ம.வேங்கடராமையா. வரலாறு, ஆன்மிகம், சமூகவியல், இலக்கியம் எனப் பல நோக்குகளில் கொண்டாட வேண்டிய நூல் இது. இன்னொரு பக்கம், இம்மரபை நாம் மிக விரைவாக இழந்துகொண்டிருப்பது குறித்த வருத்தத்தையும் இந்நூல் உருவாக்குகிறது.
தமிழில் பெயர் வைப்பதே அரிதாகிக்கொண்டிருக்கிறது. உலகில் எல்லாரும் சொல்லும் வண்ணம் ‘ஸ்டைலான’பெயர் வேண்டுமென்று நம்முடைய அடையாளங்களில் ஒன்றை இழக்கலாமா?
-என்.சொக்கன்,
நன்றி: அந்திமழை, ஜுன் 2018.
இந்தப் புத்தகத்தை வாட்ஸப்பில் ஆர்டர் செய்ய: 9500045609
இந்தப் புத்தகத்தை போன் மூலம் வாங்க: டயல் ஃபார் புக்ஸ் – 04449595818