கல்வித்துறையிலிருந்து விடை பெறுகிறேன்
கல்வித்துறையிலிருந்து விடை பெறுகிறேன், பொன்னீலன், சீதை பதிப்பகம், பக்.264, விலை ரூ.250.
சமூக அக்கறை மிகுந்த எழுத்தாளராக அறியப்பட்ட பொன்னீலன், கல்வித்துறையில் பணியாற்றி ஓய்வு பெற்றவர். இந்நூலில் அவர் கல்வித்துறையில் ஏற்ற பணிகளைப் பற்றியும், அதில் கிடைத்த அனுபவங்களைப் பற்றியும் மிகச் சுவையாகச் சொல்லியிருக்கிறார்.
மதுரை தியாகராசர் மாதிரிப் பள்ளியில் முதன் முதலில் கணிதப் பாடம் எடுத்த அனுபவத்துடன் தொடங்குகிறது அவர் கல்விப் பயணம். 1962 – இல் மதுரையில் உள்ள விருதுநகர் இந்து நாடார் உயர்நிலைப் பள்ளியில் ஆசிரியராகப் பணியில் சேர்கிறார். ஆனால் அங்கு நிரந்தர வேலை என்ற போதிலும் தொடர்ந்து பணிபுரியாமல், கன்னியாகுமரி மாவட்டம் சூரத்தியறையில் தற்காலிக அறிவியல் ஆசிரியர் பணியில் சேர்கிறார்.
நான்கு ஆண்டுகள் அங்கு பணி செய்த பிறகு, நாகலாபுரம் வட்டாரத்து பள்ளி துணை ஆய்வாளராக நியமிக்கப்படுகிறார். 1995 இல் சென்னை பள்ளிக் கல்வி இயக்ககத்தில் அறிவியல்துறை உதவி இயக்குநராகப் பொறுப்பேற்கிறார். இவ்வாறு கல்வித்துறையில் பல பணிகளை, பல ஊர்களில் செய்திருக்கும் பொன்னீலன், பணியின்போது அவர் மேற்கொண்ட பல செயல்களை இந்நூலில் விரிவாகச் சொல்லியிருக்கிறார்.
ஒவ்வொரு காலத்திலும் அவருடன் பழகிய நண்பர்களைப் பற்றியும், சந்தித்த எழுத்தாளர்களைப் பற்றியும், கல்வித்துறையில் பணியிலிருந்தாலும், அதோடு கூடவே அவர் ஆற்றிய படைப்பிலக்கியப் பணிகளைப் பற்றியும், அவர் சார்ந்த முற்போக்கு இயக்கப் பணிகளைப் பற்றியும் இந்நூல் அற்புதமான பதிவுகளைச் செய்திருக்கிறது.
உலக சமாதான மாநாட்டில் கலந்து கொள்ள டென்மார்க் சென்றது, அதன் பின் மாஸ்கோ சென்றது, இலங்கைக்குச் சென்றது என நூலாசிரியரின் பயண அனுபவங்களும் இந்நூலில் பதிவாகியுள்ளன. கல்வித்துறை எவ்வாறு செயல்படுகிறது, எப்படிப்பட்ட மாறுதல்கள் தேவை என்பதை தமது அனுபவங்களின் அடிப்படையில் சமூக அக்கறையுடன் இந்நூலில் நூலாசிரியர் சொல்லியிருப்பது குறிப்பிடத்தக்கது.
நன்றி: தினமணி, 30/12/19
இந்தப் புத்தகத்தை வாட்ஸப்பில் ஆர்டர் செய்ய: 9500045609
இந்தப் புத்தகத்தை போன் மூலம் வாங்க: டயல் ஃபார் புக்ஸ் – 04449595818