சிலம்புச் செல்வரின் அறவழிப் போராட்டங்கள்
சிலம்புச் செல்வரின் அறவழிப் போராட்டங்கள், தஞ்சை வெ.கோபாலன், அன்னம், பக்.100, விலை ரூ.80.
சைமன் கமிஷனுக்கு எதிர்ப்புத் தெரிவித்த போராட்டம் (1928), உப்பு சத்தியாக்கிரகம் (1930), கள்ளுக்கடை மறியல் போராட்டம் (1931), தனிநபர் சத்தியாக்கிரகம்(1941), ஆகஸ்ட் புரட்சி (1942), வடக்கெல்லை போராட்டங்கள், தெற்கெல்லைப் போராட்டங்கள் என பல மக்கள் நலன் சார்ந்த பிரச்னைகளுக்காகப் போராடி எட்டுமுறை சிறை சென்றவர் ம.பொ.சிவஞானம்.
காங்கிரஸ் கட்சியில் அவர் இருந்தபோதே, ஆந்திர மாநில காங்கிரஸ்காரர்களுடன் கருத்து மாறுபாடு கொண்டு வடக்கெல்லைப் போராட்டத்தை நடத்தியவர்; காமராஜர் ஆட்சிக் காலத்தில் திருவாங்கூர் – கொச்சி சமஸ்தானத்துக்கு உட்பட்ட பகுதிகளைத் தமிழகத்துடன் இணைக்க வேண்டும் என்று தெற்கெல்லைப் போராட்டத்தில் பங்கேற்றவர்;
ராஜாஜி தமிழக முதலமைச்சராக இருந்தபோது கொண்டு வந்த பண்ணையாள் சட்டத்துக்கு, புதிய கல்வித் திட்டத்துக்கு ஆதரவாகப் பேசியவர் என பல குறிப்பிடத்தக்க பங்களிப்புகள் ம.பொ.சிக்கு உண்டு என்பதை இந்நூல் எடுத்துக் கூறுகிறது. வ.உ.சி. க்கு சிலை வைக்கும் பணியை நிறைவேற்றி வ.உ.சி.யின் தியாகத்தை நாடறியச் செய்த பெருமை ம.பொ.சிக்கு உண்டு. தமிழிலக்கியங்களின் மேன்மையை எடுத்துக் கூறினார். திராவிடர் கழகம் தனித் திராவிட நாடு கோரிக்கையை முன்வைத்தபோது,சுயாட்சி உரிமை பெற்ற தமிழகம் அகில இந்திய தலைமையின் கீழ் ஓர் அங்கமாகச் செயல்படும் என்ற கருத்தை ம.பொ.சி. கொண்டிருந்தார்.
மதராஸ் மனதே என்று சென்னையை ஆந்திர மாநிலத்தின்தலைநகராகக் கேட்டவர்களின் கோரிக்கைக்கு எதிராக ம.பொ.சி.போராடினார். சென்னை தமிழகத்துக்கு கிடைத்தது. திருத்தணி, திருவாலங்காடு போன்ற தமிழர் வாழும் ஊர்கள் தமிழகத்தின் எல்லைக்குள் கொண்டு வரப்பட்டதற்கு ம.பொ.சி.யின் போராட்டங்களே காரணம். திருவாங்கூர் சமஸ்தானத்துக்குட்பட்ட தமிழ்பேசும் பகுதிகள் அனைத்தும் தமிழகத்தோடு இணைக்கப்பட்டு கன்னியாகுமரி மாவட்டமாக உருப்பெறுவதில் தெற்கெல்லைப் போராட்டம் முக்கிய காரணமாக அமைந்தது. அதில் ம.பொ.சி.யின் பங்கு மகத்தானது என ம.பொ.சி.யின் தனித்துவமான போராட்டப் பண்புகளை மிகச் சிறப்பாக இந்நூல் விளக்கிக் கூறுகிறது.
நன்றி: தினமணி, 30/12/19
இந்தப் புத்தகத்தை வாட்ஸப்பில் ஆர்டர் செய்ய: 9500045609
இந்தப் புத்தகத்தை போன் மூலம் வாங்க: டயல் ஃபார் புக்ஸ் – 04449595818