கம்பர் சில கண்ணோட்டம்
கம்பர் சில கண்ணோட்டம், சு.அட்சயா, காவ்யா, பக்.167, விலை ரூ.170.
கம்பனை வித்தியாசமான கோணங்களில் இந்நூல் அணுகுகிறது. கம்பராமாயணத்தில் இடம் பெற்றுள்ள இசைக் கருவிகளைப் பற்றிய விரிவாக எடுத்துரைக்கும் கட்டுரை, தற்கால உளவியலில் நினைவின் வகைகளாகக் கூறப்படும் நினைவின் பகுதியை மனத்திருத்தல், மீட்டுக் கொணர்தல் அல்லது மீட்டறிதல் ஆகிய கோட்பாடுகள் கம்பராமாயணத்தில் இடம் பெற்றிருப்பதைக் கூறும் கம்பரின் உளவியல் சிந்தனைகள் கட்டுரை நம்மை வியக்க வைக்கின்றன.
கம்பராமாயணத்தில் கூறப்படும் நீர்வளம், நெல் வளம், மன்னரின் நல்லாட்சி, மக்களின் இன்ப வாழ்வு, மாதர்களின் மாண்பு ஆகியவற்றைப் பற்றிய கம்பனில் சமுதாய வளங்கள் கட்டுரை, உயர்திணை உயிர்கள் மட்டுமல்ல, அஃறிணை உயிர்களும் இன்புற்று வாழ்ந்த ஒரு சமுதாயத்தைக் கம்பன் சித்திரித்திருப்பதாக எடுத்துக் காட்டுகிறது.
மகளிரை வாளால் கொல்வது, பிச்சைக்காரனின் பொருளைக் கவர்வது, போருக்கு அஞ்சி ஒதுங்குவது, நன்றி மறப்பது, பிறர் பசியால் வாடி நிற்க தான் மட்டும் உண்பது உள்ளிட்ட 48 பாவச் செயல்களை பரதன் கூறுவதை எடுத்துக்காட்டும் கட்டுரை அருமை.
சமத்துவ உரிமை, குடியிருப்பு உரிமை, பேச்சுரிமை, உணவு உரிமை, வேலை வாய்ப்புரிமை, பண்பாட்டு உரிமை, கல்வி உரிமை, உடல் ஊனமுற்றோருக்கான உரிமை என பல மனித உரிமைகளைப் பற்றிய பாடல்கள் கம்பராமாயணத்தில் இடம் பெற்றிருப்பதை எடுத்துக்காட்டும் கம்பர் காட்டும் மனித உரிமைகள் கட்டுரை சமகாலப் பிரச்னைகளை நினைவுபடுத்துவதாக உள்ளது. கம்பரை ஆழமாக அறிய உதவும் நூல்.
நன்றி: தினமணி, 22/9/19
இந்தப் புத்தகத்தை வாட்ஸப்பில் ஆர்டர் செய்ய: 9500045609
இந்தப் புத்தகத்தை போன் மூலம் வாங்க: டயல் ஃபார் புக்ஸ் – 04449595818