கம்பராமாயணம் சுந்தரகாண்டம் – விளக்கவுரை

கம்பராமாயணம் சுந்தரகாண்டம் – விளக்கவுரை, உ.வே.சாமிநாதையர், டாக்டர் உ.வே.சாமிநாதையர் நூல் நிலையம், பக்.1144, விலை ரூ. 500.

கம்பராமாயணத்திலேயே மிகச்சிறந்த பகுதி, சீதையின் குணநலன்களையும் அநுமனின் பெருமைகளையும் கூறும் சுந்தரகாண்டமே ஆகும். அநுமனுக்கு ‘சுந்தரன் 39’ என்று ஒரு பெயர் வழங்கப்படுவதால் அவனுடைய வீர தீரச் செயல்களை விரிவாகக் கூறும் பகுதி ’சுந்தரகாண்டம் 39’ என்று வழங்கப்படலாயிற்று. இக்காண்டத்தை நாள்தோறும் படிப்பவருக்கு நல்லன எல்லாம் கிட்டும் என்பது ஆன்றோர் வாக்கு.

அப்படிப்பட்ட சிறப்புப் பெற்ற கம்பராமாயணத்தின் பல பிரதிகளை ஆராய்ந்து ‘தமிழ்த்தாத்தா 39’ உ.வே.சாமிநாதையர் எழுதியுள்ள விளக்க உரைகளின் தொகுப்பே இந்நூல். (இதன் முதல் பதிப்பு 1957-இல் வெளிவந்திருக்கிறது).

சுந்தரகாண்டத்தில் இடம்பெற்றுள்ள 1,296 செய்யுள்களுக்கான பதவுரை, விளக்கவுரை, பிற நூல்களிலிருந்து மேற்கோள்கள், பிரதி பேதம் போன்றவற்றைத் தெளிவாக விளக்கியுள்ளார் உ.வே.சா. குறிப்பாக, ஊர் தேடு படலம், சூடாமணிப் படலம், திருவடி தொழுத படலம் போன்றவற்றில் அத்தியாத்ம ராமாயணம், கலிங்கத்துப்பரணி, சம்பூ ராமாயணம், நற்றிணை, நைடதம், திவாகரம், தொல்காப்பியம், பிரபுலிங்க லீலை போன்ற தமிழ் மற்றும் வடமொழி நூல்களிலிருந்து உ.வே.சா. எடுத்துக்காட்டும் மேற்கோள்கள் நம்மைத் திகைக்க வைக்கின்றன.

இந்நூலின் இணைப்புப் பகுதியாக தசாபுக்திகளில் பாராயணம் செய்ய வேண்டிய சுந்தரகாண்டம் பாடல்கள், செய்யுள் முதல் குறிப்பகராதி, அரும்பத அகராதி, ஏட்டுச்சுவடியில் இருந்த பழைய உரையின் சில பகுதிகள், ராமாயண விருத்தம் போன்றவை சேர்க்கப்பட்டுள்ளது சிறப்பு.

மேலும், பிற கம்பராமாயணப் பதிப்புகளில் காணப்படும் ஒரு சில செய்யுள்கள் இந்நூலில் காணப்படாததற்கும், வேறு பல பதிப்புகளில் காணப்படாத செய்யுள்கள் இந்நூலில் இடம்பெற்றிருப்பதற்கும் என்ன காரணம் என்பது பதிப்புரையிலேயே தெளிவாக விளக்கப்பட்டுள்ளது.

அதுமட்டுமல்ல, உ.வே.சாமிநாதையர் சுந்தரகாண்டத்தில் தமக்கு மிகவும் பிடித்ததாகக் கருதிய 120 பாடல்களைப் பட்டியலிட்டிருப்பது மிகவும் சிறப்பு.

நன்றி;தினமணி, 30/10/2017.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *