கம்பரச ஆராய்ச்சி
கம்பரச ஆராய்ச்சி, கு. பாலசந்திர முதலியார், ஸ்ரீ செண்பகா பதிப்பகம், பக். 160, விலை 150ரூ.
கடந்த, 1949ல் அண்ணாதுரை எழுதிய, ‘கம்பரசம்’ என்ற நுாலுக்கு மறுப்பு நுாலாக வெளிவந்த இந்த நுால் ஒரு மறுபதிப்பாகும். எதிர்வினைத் திறனாய்வு செய்ய சரியான சான்றுகளும், தரவுகளும் வேண்டும்.
அப்போது தான், ஒருவர் கூறியுள்ள கருத்திற்கு மறுப்பான கருத்தை முன்வைக்க முடியும். இந்த நுால், அண்ணாதுரை எழுதிய கம்பரசத்தை அடி முதல், நுனி வரை ஆழ்ந்து படித்து ஆராய்ந்து, தம் கருத்தை நுாலாசிரியர் தடை விடைகளால் பதிவு செய்துள்ளார். ஒரு நுாலைக் குறை கூறுவதற்குரிய காரணங்கள் பல.
நோக்குவாரின் நோக்கம் எத்தகையது என்பதை உணர வேண்டும். வெறுமனே குறை கூறுவது தகாது. தாம் கொண்ட கொள்கையை நுாலின் மீது திணிக்க முடியுமானால், அந்நுாலில் ஒருவர் மிக்க ஆழங்கால் பட்டிருக்க வேண்டும்.
அண்ணாதுரை கம்பராமாயணத்தை தம் நோக்கில் கண்டுணர்ந்த சில செய்திகளை, இம்மறுப்பு நுாலாசிரியர் தக்கவாறு பதிலுரைத்துள்ளார்.ஒரு பெருங்காவியம் கடல் போன்றது. அதில் எல்லாம் கலப்பது, காவியக் கடலில் முங்கிக் குளித்து முத்து எடுப்பது ஒருவித ரசனை. அதை நுனித்தறிந்து நோக்குவார்க்கே உண்மையும் தெளிவும் விளங்கும்.
அண்ணாதுரை எடுத்துக்காட்டும் கம்பராமாயணக் காட்சிகள் காமரசத்தை அடிப்படையாகக் கொண்டிருப்பன என்பதை உணர்ந்தறிந்த காரணத்தால், அண்ணாதுரை எழுதிய கம்பரசத்தின் ஒன்பது பிரிவுகளையும் ஆராய்ந்து, அவற்றை ஒன்றன் பின் ஒன்றாக மறுத்துரைத்திருக்கிறார் இந்நுாலாசிரியர்.
அயோத்தி நகரக் குடிமக்கள் காமாந்தரக் காட்டுமிராண்டிகள், கங்கையில் ஓடமேறிச் சென்றதில் காட்டப் பெறும் ஆபாசம், பரத்துவாச முனிவர், களைத்து வந்த பரதனுடைய சேனைக்கு விருந்து அளித்ததை, ‘விலை கேளா விபசாரம்’ என்று கூறல், சீதையின் அங்க அடையாளங்களை அனுமனிடம் ராமன் தெரிவித்தல்.
கம்பர் காட்டியுள்ள உடல் உறுப்பு வருணனைகள், அவற்றுக்குரிய சொல்லாட்சிகள் போன்றவற்றை அண்ணாதுரை தம் நோக்கில் கண்டுரைத்துள்ளதை அகச்சான்று வழியும், புறச்சான்று வழியும் மறுத்துரைத்துத் தம் கருத்தை நிறுவியிருக்கிறார் இந்நுாலாசிரியர்.
கவித்துவமிக்க காவியத்தில் அனைத்தும் இருக்கும். அதை நோக்குவார் தம் திறத்திற்கேற்ப அதன் மெய்ப்பொருளைக் காண்பது தான் சிறப்புடையது என்பதை இந்நுால் வெளிப்படுத்துகிறது.
– ராம.குருநாதன்
நன்றி: தினமலர்,24/3/19,
இந்தப் புத்தகத்தை ஆன்லைனில் வாங்க:http://www.nhm.in/shop/1000000028036.html
இந்தப் புத்தகத்தை வாட்ஸப்பில் ஆர்டர் செய்ய: 9500045609
இந்தப் புத்தகத்தை போன் மூலம் வாங்க: டயல் ஃபார் புக்ஸ் – 04449595818