கம்பதாசன் படைப்பாளுமை

கம்பதாசன் படைப்பாளுமை, ஆர். சம்பத், சாகித்ய அகாடமி, பக். 224, விலை 335ரூ.

கம்பனை காட்டும் கவிஞர்.

இவர் கம்பதாசர் அல்லர்; கம்பரே’ என்று, ரசிகமணி டி.கே.சி.,யால் புகழப் பெற்ற கம்பதாசன் தமிழின் பெருங்கவிஞர்; திரைப்படப் பாடலாசிரியர்; நாடக நடிகர்; திரைப்படக் கலைஞர்; சிறுகதையாளர்; நாவலாசிரியர்; இதழாசிரியர் போன்ற பன்முக ஆளுமையாளர். மகாகவி பாரதிக்குப் பின், தமிழகத்தில் தோன்றி, கவிதையை வளம் செய்த ஆற்றல் மிகுந்த சிறந்த கவிஞர்களுள், கம்பதாசன் குறிப்பிடத்தகுந்தவர்.

பாரதி மரபினைப் பின்பற்றிப் படைப்புகளைப் படைத்தாலும், தனக்கென்று ஓர் இலக்கிய மரபினை ஏற்படுத்திக் கொண்டவர். தன்னை ஒரு சமதர்ம கவிஞராக அடையாளப்படுத்திக் கொண்டு வாழ்ந்தவர்.

அவரின் பாட்டுகள், வடிவ அழகோடும், புதிய பாடுபொருட்களோடும், புத்தம் புது புலப்பாட்டு நெறிகளோடும் விளங்குவதை காணலாம். கம்பதாசனின் நூற்றாண்டு விழாவை ஒட்டி, சாகித்ய அகாடமி நடத்திய உரையரங்கில் இடம் பெற்ற ஆய்வுக் கட்டுரைகளின் தொகுப்பே இந்நூல். இந்நூலுள், கம்பதாசன் பாடல்களில் காதல், வீரம், இறையுணர்வு போன்ற மரபு நிலைப்பாடு பொருள்களேயன்றி, புதிய பாடுபொருள்களாக அமைந்துள்ள முற்போக்கு, தேசியம், தமிழ் தேசியம், பெண்ணியம், சமுதாய விளம்பு நிலை மக்களின் வாழ்வு ஆகியனவும், விரிவாக ஆய்வு செய்யப்பட்டு உள்ளன.

தமிழை, தமிழரை, தமிழ் இலக்கியத்தை எல்லாம் தனிமைப்படுத்தி விட்ட, திக்குத் தெரியாத காட்டில் கொண்டு போய் சேர்த்து விட்ட, திராவிடச் சுனாமியில் சிக்காத கவிஞராக, சிங்கமாகக் காட்சி தருகிறார் என, கட்டுரையாசிரியர் பதிவு செய்துள்ளார் (பக்.188). களமிறங்கி, வீதியில் திரிந்து விழுப்புண் பட்டு போராடிய, கவிஞர் ஜெயப்பிரகாஷ் நாராயணனை தலைவராகக் கொண்டவர்.

அசோக் மேத்தா, டாக்டர் ராம் மனோகர் லோகியா ஆகியோரின் அன்பைப் பெற்றவர். ரங்கூனில் நடைபெற்ற சோசலிஸ்ட் மாநாட்டில், கொள்கை முழக்கம் செய்தவர் என்பதும் பதிவாகியிருப்பது சிறப்பு.

– புலவர் சு.மதியழகன்

நன்றி: தினமலர், 25/9/2016.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *