கண் அறியாக் காற்று

 

கண் அறியாக் காற்று, சஹானா, ஆகுதி பனிக்குடம் பதிப்பகம், விலை 100ரூ.

கீறி குணப்பட்ட கண்களின் அறிதல்

என் படகு

கடல் மீன்கள் தூங்கியிருக்கும்

மணல் நண்டுகள் சண்டையிடும்

கடல் ஆமைகள் அமைதியாக

கரை ஏறித் தவழ்ந்து மகிழும்

சூரியன் கடலறையில் ஓய்வெடுக்கும்

வான் நிலா மேலேறி பணியைத் தொடரும்

மேகம் புகைநிறம் ஆகிவிடும்

ஒரே ஒரு மீன் மட்டும் விழித்து இருக்கும்

என் படகு

கடலில் செல்லும் நேரம்.

‘கணத்தின் மொக்கவிழ்ந்தால் காலாதீதம்’ என்பது பிரமிளின் கவிதை வரி. அந்தக் கண்டுபிடிப்பை கவிதை கணங்களாக நிகழ்த்துபவை சஹானாவின் கவிதைகள். இறந்த உலகங்கள், இறந்த அனுபவங்கள் மோதிக்கொண்டேயிருக்கும் சித்தத்தைக் கிழித்து தற்கணத்தில் வேரூன்ற சஹானா சொல்லும் தேவதைக் கதைகளாக அவரது கவிதைகள் இருக்கின்றன. தனக்கும் தன்னைச் சுற்றியுள்ள இயற்கைக்கும் பேதமின்மையை உணரும் புள்ளிகளில் தன் கவிதைகளை எழுதிப்பார்த்துள்ளார் சஹானா. பள்ளி இடைவெளியில் கழிப்பறைச் சுவர் மேல் தேங்கியிருக்கும் நீரில் கும்மாளமிடும் குருவியைத் தன் மனதில் பாதியாக சஹானாவுக்குப் பார்க்கத் தெரிகிறது.

இயல்பாகவே கற்பனைக்கும் நிஜத்துக்குமான திரைச்சீலை கிழிந்த உலகம் சஹானாவுடையது. ‘சிறு துளியில் எனது குடம் பொங்கி வழிகிறது’ என்னும் அறிதல் அப்படித்தான் சாத்தியமாகிறது. இந்த உலகில் எங்கோ ஓரிடத்தில் சிறுதுளியில் பொங்கும் குடத்தின் சாத்திய இருப்பை அந்தக் கவிதை உறுதி செய்துவிடுகிறது. தாய்க்குக் குழந்தை பாலூட்டுகிறது என்ற வரியும் உண்மையாகும் இடம் அது.

சம்பிரதாயப் பள்ளிப் படிப்பிலிருந்து வெளியேறிவிட்ட சஹானா குழந்தை, ஞானி, சிறுமி, மகள் என்னும் கட்டங்களில் தாண்டித் தாண்டி விளையாடியபடி அடைந்திருக்கும் சுயகல்வியாக இந்தக் கவிதைகள் தெரிகின்றன. குழந்தை, பெண் என்ற நிலையில் கவிஞன் என்ற தொழில்நெறியாளன் அபூர்வமாகச் சென்றுசேரும் இடங்களைக் கவிதையின் தாதுநிலையில் சஹானா பிடித்திருக்கிறாள்.

பிரமிள் எழுதிய சிறந்த கவிதைகளில் ஒன்றான ‘வண்ணத்துப்பூச்சியும் கடலும்’ கவிதையிலாவது வண்ணத்துப்பூச்சி இறந்த பிறகு கடலின் தித்திப்பை உணர்கிறது. ஆனால், சஹானாவின் பட்டாம்பூச்சியோ மிகப் பெரிய பூவில் தேன் குடித்து முடித்த பின்னும் வாய்க்குள் சுவை தீர்ந்துவிடவில்லை. ஆழம், நிசப்தம் தரும் இனிப்பைச் சிறுவயதிலேயே சுவைத்திருக்கிறாள்.

பெண்கள் தாவரங்கள்; அதனால், பூச்சூடுகிறார்கள். இயற்கைக்கு மிக அருகிலிருக்கும்போது உணரும் பேதமற்ற தன்மையையும் எல்லையற்றது தரும் திகைப்பையும் எதுவும் தீராத போத உணர்வையும் இந்தக் கவிதைகள் இயற்கையாக இறகுகளைப் போல சுமக்கின்றன; தித்திப்புடன் சுவைக்கின்றன.

தொட்டிலில் தூங்கும் லாஸ்யா, உலகம் சுகிக்கத் தூங்குகிறாளாம். பூவிலிருந்து உறிஞ்ச முடியாத மஞ்சள் தேன் உடலாம். நாம் பார்க்க இயலாத ஒரு மழைக்காட்டில் அந்தக் குழந்தை ஓய்வெடுக்கிறதாம்.

கடல், அடர்காடு, மழை, மீன், பட்டாம்பூச்சி, காகம், நட்சத்திரம், மெழுகு, மேகங்கள் என உருமாறி எல்லாவற்றோடும் அடையாளம் கண்டு தற்கணத்தில் மூழ்கும் கவிதைகள் இவை. இத்தொகுப்பில் உள்ள சிறந்த கவிதைகளில் பிரமிள், நகுலன், தேவதச்சன், ஆத்மாநாம் ஆகியோரின் கவிதைகளின் அனுபவ எதிரொலிகளைப் பார்க்க முடிகிறது. இயற்கையின் ஒரு பகுதியாகத் தன்னைத் திறந்து அந்தக் கணத்தின் எக்களிப்பில் நிகழும் அறிதல்களைத் தமிழில் ஏற்கெனவே கவிஞர் தென்றல் எழுதியுள்ளார்.

ஒரே ஒரு மீன் மட்டும் விழித்திருக்கும்போது கடலில் படகைச் செலுத்தத் தெரிந்த சஹானாவின் கவிக்கண்கள் அபூர்வமானவை; ஏனென்றால், அவை கீறி குணப்பட்ட கண்ணின் அனுபவங்களைச் சேகரித்தவை. கவிஞர்கள், கவிதை வாசகர்கள் மேல் சடசடவென்று புதுநீரை இறகுகளால் தெளிக்கவல்லவை. கண் அறியாக் காற்று என்ற தலைப்பு சரிதான். சஹானாவின் கவிதைகளைக் கண்டு அதைப் பதிப்பித்திருக்கும் ஆகுதி-பனிக்குடம் பதிப்பகம் பாராட்டுக்குரியது.

– ஷங்கர்ராமசுப்ரமணியன்,

நன்றி: தி இந்து, 13/10/18.

இந்தப் புத்தகத்தை ஆன்லைனில் வாங்க:http://www.nhm.in/shop/1000000027257.html

இந்தப் புத்தகத்தை வாட்ஸப்பில் ஆர்டர் செய்ய: 9500045609

இந்தப் புத்தகத்தை போன் மூலம் வாங்க: டயல் ஃபார் புக்ஸ் – 04449595818

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *