கந்தரலங்காரம் மூலமும் உரையும்
கந்தரலங்காரம் மூலமும் உரையும், கவிஞர் பத்மதேவன், ஸ்ரீ இந்து பப்ளிகேஷன்ஸ், பக். 120, விலை 120ரூ.
கந்தன் என்ற சொல்லுக்கு பற்றுக்கோடானவன் என்பது பொருளாகும். கந்தன் என்றால் ஒன்று சேர்க்கப்பட்டவன். பல்வேறு மலர்களைக் கொண்டு, பூமாலை கட்டி அழகனுக்கு அணிவித்து அழகு செய்வது போல, முருகனின் பல செயல்களைக் கொண்டு செய்யுளால் அலங்காரம் செய்து அருணகிரிநாதரால் பாடப்பட்டது கந்தரலங்காரம்.
கந்தரலங்காரத்தில் முருகனுடைய அடி முதல், முடி வரை வருணிக்கப்பட்டுள்ளது. யாக்கை நிலையாமை, செல்வம் நிலையாமை, யம பயம் நீங்குதல் போன்ற வாழ்வியல் செய்திகள் விளக்கப்பட்டுள்ளன.
கந்தரலங்காரத்துள் ஒரு கவி கற்று அறிந்தவர், வேந்தர் தமக்கும் அஞ்சார்; இயமனுக்கும் அஞ்சார்; நரகிற் புகார்; நோய்வாய்ப்படார்; விலங்குகளாலும், விஷப் பிராணிகளாலும் தீங்கடையார் என்பவை, இந்த நுாலின் நுாற் பயன் செய்யுளால் விளங்குகிறது. இந்நுால் முத்தி நிலத்தின் வித்து; பக்தி நிலத்தின் சொத்து.
இந்த நுாலினுள் பொழிப்புரை, கருத்துரை, குறிப்புரை என்று அமைந்து ஒவ்வொரு பாடலையும் அழகு செய்கிறது. 66ம் பாடல் உரையில், ‘செல்வம் நிலைத்திராது என்பதை வானத்தில் தோன்றும் மின்னலைப் போல செல்வமும் தோன்றி மறையக் கூடியது என்கிறார்.
நாள் தோறும் பாராயணம் செய்யக்கூடிய வகையில் அமைந்த இந்த நுால், பொருளோடு புரிந்து கொள்வதற்கு பெரிதும் துணை செய்யும் என்பதில் ஐயம் இல்லை.
– பேராசிரியர் இரா.நாராயணன்
நன்றி: தினமலர், 4/11/18.
இந்தப் புத்தகத்தை ஆன்லைனில் வாங்க:http://www.nhm.in/shop/1000000027312.html
இந்தப் புத்தகத்தை வாட்ஸப்பில் ஆர்டர் செய்ய: 9500045609
இந்தப் புத்தகத்தை போன் மூலம் வாங்க: டயல் ஃபார் புக்ஸ் – 04449595818