கருப்பட்டி
கருப்பட்டி, ஆசிரியர் : மலர்வதி, காலச்சுவடு பதிப்பகம், விலை 175/-
பெண்களில் விரல் விட்டு எண்ணக்கூடியவர்களே வட்டாரம் சார்ந்து எழுதுகிறார்கள். அதில் மலர்வதியும் ஒருவர். நாஞ்சில்நாட்டு மொழியும், அப்பகுதி மக்களின் வாழ்க்கையும் இவரது புனைவுகளில் அப்பிக் கிடக்கின்றன. ‘காத்திருந்த கருப்பாயி’, ‘தூப்புக்காரி’, ‘காட்டுக்குட்டி’ ஆகிய நாவல்களை எழுதியிருக்கிறார். வாசகர்களின் பெருவாரியான கவனம் பெற்ற ‘தூப்புக்காரி’ நாவலுக்கு சாகித்ய அகாடமியின் யுவபுரஸ்கார் விருது கிடைத்தது.
‘கருப்பட்டி’ இவரது முதல் சிறுகதைத் தொகுப்பு. கருப்பட்டி என்பது வெறும் இனிப்புப் பொருளன்று; பண்பாட்டின் குறியீடும்கூட. அந்நில வாழ்க்கையின் ஒரு பகுதியாக இருந்த கருப்பட்டி, இன்று ஈ மொய்க்கும் பண்டமாகப் பார்க்கப்படுகிறது. கருப்பட்டி அப்படியேதான் இருக்கிறது; அதன் மீதான மதிப்பீடுகள்தான் மாறியிருக்கின்றன.
பழமையின் மீதான ஏக்கம் மலர்வதியிடம் ஆழமாகத் தேங்கியிருக்கிறது. பலூனைத் தேடித் தேடி வாங்கிய சிறுவர்களை இன்று திருவிழாக்களில் பார்க்க முடிவதில்லை என்றும் ஒரு கதையில் எழுதியிருக்கிறார். ‘கருப்பட்டி’ தொகுப்பின் பொதுக்கூறாக இன்னொரு அம்சமும் பிடிபடுகிறது. தொகுப்பின் பெரும்பான்மைக் கதைகளில் வரும் கதாபாத்திரங்களுக்குப் பெற்றோர் உயிருடன் இல்லை; அல்லது இருவரில் ஒருவர் மட்டுமே இருக்கிறார்கள். பெற்றோரை இழந்த குழந்தைகளுடைய பிரச்சினையின் வெவ்வேறு வடிவங்களை மலர்வதி தம் கதைகளுக்கு எடுத்துக்கொள்கிறார். எல்லாக் கதைகளுமே ஏதோவொரு வகையில் துயரத்தைப் பகிர்ந்துகொள்பவைதான்.
பெண்களின் துயரங்களைத் தன் வட்டார மொழியில் ஆழமாக எழுதிவிடுகிறார் மலர்வதி. இவரது எழுத்தில் அவ்வளவு வட்டாரச் சொற்கள் கொட்டிக்கிடக்கின்றன. கூடையை வைத்து அள்ளலாம். இந்தச் சொற்களை அறிந்துகொள்வதற்காக மட்டுமேகூட ‘கருப்பட்டி’ தொகுப்பை வாசிக்கலாம். அப்படியொரு தித்திப்பு!.
நன்றி. தமிழ் இந்து. 11.07.2020.
இந்தப் புத்தகத்தை ஆன்லைனில் வாங்க:https://dialforbooks.in/product/1000000030152_/
இந்தப் புத்தகத்தை வாட்ஸப்பில் ஆர்டர் செய்ய: 9500045609
இந்தப் புத்தகத்தை போன் மூலம் வாங்க: டயல் ஃபார் புக்ஸ் – 04449595818