கசடறக் கற்க கற்பிக்க…
கசடறக் கற்க கற்பிக்க…, முனைவர் மு.கனகலட்சுமி, சிவசக்தி பதிப்பகம், பக். 156, விலை 140ரூ.
ஷெனாய் நகரிலுள்ள சென்னை பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் ஆசிரியையாகப் பணியாற்றி வரும் இந்நூலாசிரியர், இதற்கு முன் ராமநாதபுரம் மாவட்டத்திலுள்ள பல அரசுப் பள்ளிகளில் தலைமை ஆசிரியராகவும் பணியாற்றியவர். பி.ஹெ.டி வரை கல்வித் தகுதி பெற்றுள்ள இவர், ஆரம்பக் கல்வி மாணவர்கள் மிக எளிய முறையில் தமிழ் எழுத்துக்களை எழுதி, படிக்க புதிய முறைகளை ஆய்வு செய்து இந்நூலை உருவாக்கியுள்ளார்.
முதலில் குழந்தைகள் மொழி கற்பதில் எதிர்கொள்ளும் சிக்கல்களைக் கண்டறிந்து, அவற்றை அகற்றி, அவர்களைத் தயக்கமின்றி, பேசவும், கேட்கவும், வாசிக்கவும், எழுதவும் வைக்க என்ன செய்ய வேண்டும், எவ்வகையான பயிற்சிகளை, எப்படி நடைமுறைப்படுத்த வேண்டும் என்ற விபரங்களை இந்நூலில் விளக்கியுள்ளார். குறிப்பாக தமிழின் ஒவ்வொரு எழுத்தையும் எப்படி உச்சரித்தால், அந்த எழுத்துக்கான வரிவடிவமும் உருவாகும் என்ற பயிற்சியையும் புதிய முறையில் வரைபடத்துடன் இந்நூலில் அறிமுகப்படுத்தியுள்ளார்.
இந்த முறையில் பள்ளி மாணவர்களுக்கு முதல் நாள் என்னென்ன எழுத்துக்களை, எப்படி கற்பிக்க வேண்டும், இரண்டாம் நாள் என்னென்ன எழுத்துக்களை கற்பிக்க வேண்டும்… என்று 45 நாட்களின் அனைத்து எழுத்துக்களையும், அதையொட்டிய சொற்களையும் கற்க வைத்து, தமிழை அவர்கள் விரைவாகவும், நன்கு எழுதவும், வாசிக்கவும் செய்வதே இந்நூலின் நோக்கம். அதேபோல் ‘கணக்கு கையேடு’ என்ற இந்நூலாசிரியரின் இன்னொரு நூல், கணக்குப் பாடத்தை அதே முறையில் மாணவர்கள் 39 நாட்களில் எளிதாகக் கற்றுக்கொள்ளும் வகையில் செய்முறை பயிற்சியுடன் விளக்குகிறது.
இவ்விரு நூல்களும் பள்ளி மாணவர்களுக்கு எளிய முறையில் பயிற்றுவிக்க ஆசிரியர்களும், பெற்றோர்களுக்கும் மிகவும் பயன்தரத்தக்கவை.
-பரக்கத்.
நன்றி: துக்ளக், 14/3/2018.