கவி கா.மு.ஷெரீப்பின் படைப்பாளுமை
கவி கா.மு.ஷெரீப்பின் படைப்பாளுமை, தொகுப்பாசிரியர்: இரா.சம்பத்,சாகித்ய அகாதெமி, பக்.225, விலை ரூ.110.
கவிஞர் கா.மு.ஷெரீப் கவிதை, காவியம், சமயம், திரையிசைப் பாடல்கள், கலை, இலக்கியம், இலக்கணம், அரசியல், பத்திரிகை, தலையங்கம், உரைகள் எனப் பல்வேறு பரிமாணங்கள் கொண்டவர்; பல்துறைகளிலும் தமக்கென ஒரு தனியிடத்தைப் பிடித்தவர் . பத்திரிகையாளராகவும், காங்கிரஸ் கட்சி, ம.பொ.சி.யின் தமிழரசு கட்சி போன்றவற்றில் முக்கிய பங்காற்றியவராகவும், தமிழக எல்லைப் போராட்டம், இந்தி எதிர்ப்புப் போராட்டம் முதலிய போராட்டங்களில் பங்கேற்றவராகவும் அவர் அறியப்பட்டாலும், அவருடைய திரையிசைப் பாடல்களான ‘ஏரிக்கரையின் மேலே போறவளே பொன்மயில 39;, ‘பாட்டும் நானே பாவமும் நானே 39;, ‘பணம் பந்தியிலே குணம் குப்பையிலே39; முதலிய பாடல்களே இவரைப் புகழின் உச்சிக்குக் கொண்டு சென்றன.
இவருடைய பன்முகத் திறமையை இத்தொகுப்பிலுள்ள இருபது கட்டுரைகளும் பறை சாற்றுகின்றன.
கா.மு.ஷெரீப்பின் திரையிசைப் பாடல்கள், அப்பாடல்கள் காட்டும் சமுதாயச் சிந்தனைகள், அவருடைய கவிதைகளில் உள்ள ஆங்கிலச் சொற்களின் செல்வாக்கு, அவரது ‘மச்சகந்தி காவியத்தில் 39; இடம்பெறும் மெய்ப்பாடுகள், அக்காவியத்தில் வெளிப்படும் ஷெரீப்பின் கவிப்புலமை, பல்கீஸ் நாச்சியார் காவியத்தில் காட்டப்படும் பெண்கள், உரை இலக்கிய வளர்ச்சிக்கு கா.மு.ஷெரீப்பின் பங்களிப்பு, அவருடைய தலையங்கம் பற்றிய மதிப்பீடு, அவரது இலக்கணப் புலமை, கா.மு.ஷெரீப்பின் வாழ்க்கைக் குறிப்பு, கா.மு.ஷெரீப்புடனான குமரி அபுபக்கரின் நினைவலைகள் என ஒன்றுவிடாமல் அனைத்தும் இத்தொகுப்பில் பதிவாகியுள்ளன.
உலகியல் இயல்பை, எதார்த்தத்தை எளிமையாக எடுத்துரைப்பதுதான் கா.மு.ஷெரீப்பின் தனித்தன்மை. அத்தன்மை இத்தொகுப்பிலும் பளிச்சிடுகிறது.
நன்றி: தினமணி, 27/3/2017.