கேட்டதும் கிடைத்தது
கேட்டதும் கிடைத்தது, ‘பதின் கவனகர்’ இராமையா, தொகுப்பு கனகசுப்புரத்தினம், கற்பகம் புத்தகலாயம், விலை 150ரூ.
இந்நூல் வினா- விடை வாயிலாகத் திருக்குறளுக்கு விளக்கம் அளிக்கிறது. சில வினாக்கள் வேடிக்கையாகக் கேட்கப்பட்டவைபோல் தோன்றினாலும் அதற்குரிய விடையை விளக்கமாகவும் பொருத்தமாகவும் தந்திருக்கிறார் பதின் கவனகர் இராமையா.
கொம்புக்குறி இடம் பெறாத குறள் ஒன்றைக் கூறுமாறு கேட்க, அதற்கு 17 குறளைக் காட்டுகிறார் ஆசிரியர். அதேபோல் நீட்டலளவை, நிறுத்தல் அளவைக்கு ஒரு குறள், விதையில்லாப் பழம் உள்ள குறள், தோல்வியே வெற்றி ஆகின்ற குறள், ஐந்து உவமைகள் இடம் பெறும் ஒரு குறள், ஈற்றடியில் குறைந்த எண்ணிக்கை எழுத்துக்கள் வரும் குறட்பாக்கள், தொடங்கிய சொல்லைக் கொண்டே முடியும் குறள், நாள் – மலர் – காசு – பிறப்பு என்னும் வாய்ப்பாட்டில் முடியும் குறட்பாக்களின் எண்ணிக்கை, சொல்லும்போது உதடுகள் ஒட்டாத முறையில் எழுதப்பெற்றுள்ள குறட்பாக்கள் எவையெவை என்பன போன்ற அன்பர்கள் கேட்ட வினாக்களுக்கு இராமையா தயக்கமின்றித் தந்துள்ள விடைகள் அவர் திறக்குறளில் எவ்வளவு ஆழங்கால்பட்டிருக்கிறார் என்பதை இந்நூல் வாயிலாக அறிய முடிகிறது.
இராமையா அளித்த விடைகளைத் தொகுத்தளித்துள்ளார் அவர் மைந்தர் கனகசுப்புரத்தினம்.
நன்றி: தினத்தந்தி, 31/8/2016.