இதய ஒலி
இதய ஒலி, பழனி ஜி. பெரியசாமி, வானதி பதிப்பகம், விலை 350ரூ.
இன்று தமிழ்நாட்டின் முக்கிய தொழில் அதிபர்களில் ஒருவராக விளங்கும் டாக்டர் பழனி ஜி.பெரியசாமி, சில காலத்துக்கு முன் அமெரிக்காவில் பொருளாதாரப் பேராசிரியராக இருந்தவர். தமிழக முதல்-அமைச்சராக இருந்த எம்.ஜி.ஆர் உடல் நலம் கடுமையாக பாதிக்கப்பட்டபோது, அவரை அமெரிக்காவுக்கு அழைத்துச் செல்லவும், புரூக்களின் ஆஸ்பத்திரியில் சேர்த்து சிகிச்சை அளிக்கவும் ஏற்பாடுகளை முன்நின்று செய்தவர். அதனால் எம்.ஜி.ஆர். இதயத்தில் தனி இடம் பெற்றவர். எம்.ஜி.ஆர். பற்றிய பல அபூர்வ தகவல்கள் இந்த நூலில் இடம் பெற்றுள்ளன.
ஆஸ்பத்திரியில் இருந்த எம்.ஜி.ஆரை சிவாஜிகணேசன் போய்ப் பார்த்தபோது, இருவரும் கட்டித்தபவி கண்ணீர் விட்டு அழுத நிகழ்ச்சியைப் படிக்கும்போது நெஞ்சம் நெகிழ்கிறது. இந்திரா காந்தி மறைவைத் தொடர்ந்து பிரதமர் ஆன ராஜீவ் காந்தி, பாராளுமன்றத்தைக் கலைத்துவிட்டு தேர்தல் நடத்த முடிவு செய்தார்.
பாராளுமன்ற தேர்தலுடன் தமிழக சட்டசபைக்கும் தேர்தல் நடத்த அ.தி.மு.க. தலைவர்கள் தீர்மானித்தனர். அமெரிக்காவில் ஆஸ்பத்திரியில் உடல் நலம் தேறிவந்த எம்.ஜி.ஆர். பற்றி தமிழ்நாட்டில் தவறான பிரசாரம் செய்யப்பட்டது. “எம்.ஜி.ஆர். உயிருடன் இல்லை. அவர் உடலை ஐஸ் பெட்டியில் வைத்து இருக்கிறார்கள்” என்பதே அந்தப் பிரசாரம். இதன் காரணமாக “எம்.ஜி.ஆர். நன்றாக இருக்கிறார், நடக்கிறார், பத்திரிகை படிக்கிறார்” என்பதை நிரூபிக்கும் விதத்தில், பழனி ஜி. பெரியசாமி ஒரு வீடியோ படம் எடுத்து, அப்போது தமிழக அமைச்சராக இருந்த ஆர்.எம்.வீரப்பனுக்கு அனுப்பி வைத்தார்.
அந்த வீடியோவில் இருந்து பல பிரதிகள் எடுக்கப்பட்டு, தமிழகம் முழுவதும் காட்டப்பட்டது. இதனால் தேர்தலின் போக்கு மாறி, அ.தி.மு.க. காங்கிரஸ் கூட்டணி மகத்தான வெற்றி பெற்றது. எம்.ஜி.ஆர். நலமுடன் திரும்பி, முதல்-அமைச்சர் பொறுப்பை ஏற்றார். இப்புத்தகம் பழனி ஜி.பெரியசாமியின் சுயசரிதை என்றாலும், தமிழ்நாட்டின் வரலாற்றையும் சேர்த்துக் கூறுகிறது. ஏராளமான வண்ணப்படங்கள் கண்ணைக் கவருகின்றன. மேல்நாட்டில் வெளிவரும் புத்தகங்களுக்கு இணையாக இந்த நூல் உயர்தரமாக தயாரிக்கப்பட்டுள்ளது.
தமிழிலும், ஆங்கிலத்திலும் ஒரே நேரத்தில் இந்நூல் வெளிவந்துள்ளது. படிப்பவர்கள் இதய வீணையை மீட்டி, அபூர்வ இசையை எழுப்பக் கூடியது, இந்த “இதய ஒலி,”
நன்றி: தினத்தந்தி, 31/8/2016.