கிம் கி டுக்கின் சினிமாட்டிக் உடல்கள்
கிம் கி டுக்கின் சினிமாட்டிக் உடல்கள், ஜமாலன், நிழல், விலை 120ரூ.
உலகத்தின் சினிமா ரசிகர்களுக்கு கிம் கி டுக் இப்பொழுது நெருக்கமான பெயர். குறிப்பாக இளைஞர் சமூகத்திற்கு அவரே ஆகச் சிறந்த இயக்குநர். அவரைப் பற்றிய முழுதான கட்டுரைகள் அடங்கிய தொகுப்பு.
தவிர்க்க முடியாத அவரின் அரிதான நீண்ட நேர்காணல் காணக்கிடைக்கிறது. திரைப்படத்தை புரிந்து கொள்ளும் முயற்சியில் இருக்கிற எல்லோருக்கும் இது கையில் இருக்க வேண்டிய புத்தகம். அவரது சினிமா வழக்கமான சினிமாக்களின் பழக்கப்பட்ட பாதையிலிருந்து விலகி நிற்கிறது. அவரது கதையுலகம் ஒரு கனவு போன்ற அனுபவம் கொண்டது.
சமயங்களில் காதல் கதையாகவும், மர்ம நாவலாகவும், சுய கண்டுபிடிப்பின் சாகசமாகவும், அதீத கற்பனையாகவும், தேவதைக் கதையாகவும், வார்த்தைகளற்ற துக்கமாகவும், அபத்தத்தின் வெற்றியாகவும் உருக்கொள்கிறது. அவரது படங்களின் பொருள் முன்பின் தொடர்ச்சி இல்லாதது. ஆண் பெண் உறவுகளின் முன்னிலைகளை உடைத்துப்போட்டவர். அவரது கதைமாந்தர்கள் பெரும்பாலும் தனித்து இருக்கிறவர்களாக, நிசப்தத்தின் கருக்கொண்டவர்களாக, மைய நீரோட்டத்தில் கலக்காதவர்களாக, மனக்காயங்கள் கொண்டவர்களாக, சொந்த வாழ்வில் வேரற்றவர்களாக இருப்பதைக் காண நேர்கிறது.
ஜமாலன் மொத்த கிம் கி டுக்கின் உலகத்தையும் சிரமேற்கொண்டு எழுதியிருக்கிறார். இது மாதிரியான குறிப்பிடத்தக்க ஆளுமைகளைப் புரிந்து கொள்ளவும், அறிந்துகொள்ளவும் ஜமாலன் அருமையான மேடை அமைத்துத் தருகிறார். அவரது 20 படங்களின் ஆதார சுருதியும், மையமும் சிறப்பாக முன் வைக்கப்படுகிறது.
நன்றி: குங்குமம், 7/7/2017.