சதுர பிரபஞ்சம்
சதுர பிரபஞ்சம், கோ. வசந்தகுமார், டிஸ்கவரி புக் பேலஸ், விலை 200ரூ.
மனிதனால் படைக்கப்பட்டது மொழி. ஆனால் மனிதனிலிருந்து கவிஞனைப் படைப்பது கவிதை. மொழி கருவி. கவிதையோ படைப்பாளி. அருமையான கவிதை தளத்தின் மேலிருந்து தகித்து ஒளிர்கிறார் வசந்தகுமாரன். தனித்தனி அனுபவங்களின் வெளியீடு அல்ல இக்கவிதைகள்.
ஒரே நீண்ட அனுபவச் சங்கிலியின் வெவ்வேறு கண்ணிகள். கருத்துகளின் அடிப்படையில் எழுதப்பட்டு, கருத்துகளாகவே மீந்துவிடும் மேஜைக் கவிதைகளிலிருந்து வேறுபடுபவை. வசந்தகுமாரனின் மொழி ஆரவாரமற்று வெளிப்பாட்டுக்குத் தேவையான அளவு மட்டுமே கைக்கொள்ளப்படுகிறது.
வெளிப்பாடு, அனுபவம் இரண்டும் தீவிரம் பெறும்போது அவரின் மொழியும் தீவிரமடைகிறது. இசையின் மூலமாக எல்லா மனிதனையும் அறிய முடியும். மிருகங்களைக்கூட வசப்படுத்தி மோனத்தின் உயிரை சாந்தியில் கரைய வைத்துவிட முடியும். கலை எந்த கிரகத்திலிருந்து tவரும் ஒளி என காண முடியவில்லை. ஆனால், வசந்தகுமாரனின் கவிதை வழி உணர்வுகளைப் பெறும்போது அப்படியொரு ஒளியை இங்கும் பெற முடியும் எனத் தோன்றுகிறது.
கேள்வி நிலைதான் கலைஞன். அப்படி ஒரு கட்டத்தில் இருக்கிறார் கவிஞர். அவரைப் புரிந்துகொள்வது கருத்துருவமாக நிலைக்கிறது. கூடவே தெளிவும்.
நன்றி: குங்குமம், 30/6/2017.