மகா பெரியவா எனும் தெய்வத்தின் அருள்
மகா பெரியவா எனும் தெய்வத்தின் அருள் (பரமாச்சாரியாரைப் பற்றிய பக்தர்களின் பரவச அனுபவங்கள்), தொகுப்பு: கார்த்திகேயன், தங்கத் தாமரை பதிப்பகம், 10 தொகுதிகள் ஒவ்வொரு தொகுதியும், பக்.144, விலை ரூ.60.
‘மனிதனும் தெய்வமாகலாம்’ என்பதற்கு எடுத்துக்காட்டாக, நடமாடும் தெய்வமாக, பேசும் தெய்வமாகத் திகழ்ந்தவர் காஞ்சி மகா பெரியவர். கடவுள் பக்தியை மக்களின் அன்றாட வாழ்க்கையின் அங்கமாகவே மாற்றிய கருணா சாகரம்.
தமது அருளாசியினாலும், அன்பாலும், தாய் போன்ற கருணை உள்ளத்தாலும் தம்மை நாடி வந்தவர்களின் வாழ்வில் பல அற்புதங்களை நிகழ்த்தியவர். மக்களின் ஒவ்வொரு பிரச்னைகளையும் தீர்க்க ஒவ்வொரு விதமாக அவர்களுக்கு நல்வழி காட்டியவர். அவ்வாறு நல்வழி கண்ட முன்னூறுக்கும் மேற்பட்டோரின் பரவச அனுபவப் பதிவுகள் இத்தொகுப்பில் உள்ளன.
மகா பெரியவர் எனும் தெய்வத்தின் திருவருள், அவரை நாடிச் சென்று, அவரே கதி என்று நம்பிக்கையுடன் பூரண சரணாகதி அடைந்த பக்தர்களை அவரது காருண்யம் எவ்வாறு பரவசத்தில் ஆழ்த்தியது, திருத்தியது, நல்வாழ்வு அளித்தது என்பதையெல்லாம் கண்முன் கொண்டு வந்து நிறுத்தி, கண்களைக் குளமாக்குகின்றன இப்பத்துத் தொகுப்புகளிலும் உள்ள அனுபவங்கள்.
மகா பெரியவரை நேரில் கண்டு அறியாதவர்கள், அவரின் அருளைப் பெறாதவர்கள், அவரின் மகிமைகளை உணர்ந்து கொள்ளாதவர்கள் இத்தொகுப்பில் உள்ளதைப் படித்தால், அவரை தம் மனதிலும், பூஜை அறையிலும் வைத்துப் பூசிக்கத் தொடங்கி விடுவார்கள். அத்தகைய மாற்றத்தை இத் தொகுப்பிலுள்ள பக்தர்களின் அனுபவங்கள் ஏற்படுத்துகின்றன. இத்தொகுப்பைப் படித்து, தெய்வ தரிசனத்தைக் கண்டுகளிக்கலாம்.
நன்றி: தினமணி, 24/7/2017.