குகைகளின் வழியே

குகைகளின் வழியே,  ஜெயமோகன், கிழக்கு பதிப்பகம், பக். 142, விலை ரூ.150.

இந்த நூல் ஒரு பயண அனுபவத் தொகுப்பு. ‘இதுவரை மேற்கொண்ட பயணங்களிலிருந்து முற்றிலும் மாறுபட்டது. இதுவரை சென்ற பயணம் மண்மீது ஊர்தல்; இது மண்ணுக்குக் கீழும் இருந்தது’ என்கிறார் நூலாசிரியர்.

சிபி,ஹேமாவதி, ராயதுர்க், கூட்டி, யாகி, பெலும் குகைகள் கண்டிக்கோட்டி, யாக்கண்டி குகைக்கோயில், உண்டவல்லி குகைகள், அக்கண்ண மதன குடைவரைக் கோயில், குண்டுபள்ளி குகைகள், கைலாஷ் குகைகள், தண்டே வாடா, குப்தேஸ்வர் குகைகள், பொர்ரா குகைகள் என நம்மையும் சக பயணியாக்கி விடுகிறார் நூலாசிரியர்.

பெலும் குகைகள்(ஆந்திரமாநிலம் கர்னூல் மாவட்டத்தில் அமைந்துள்ளது) இந்தியாவின் பெரிய குகை. தரைத்தளத்தில் உள்ள குகைகளில் மிகப் பெரியது. மண்ணுக்கு அடியில் ஒரு பெரிய கட்டடத் தொடர்போல இவை உள்ளன. சமண, பெளத்த துறவிகள் தங்குமிடமாகப் பயன்படுத்தி வந்தனர்.

குண்டுப்பள்ளி குகைகள் இயற்கையாகவே உருவானவை. மகா சைத்ய குகைதான் முக்கியமானது. பெளத்தம் அழிந்த பின் எவரும் அறியாமல் இருந்த இக்குகைகள் 1850 இல் பிரிட்டிஷ் நில அளவைத்துறையினரால் கண்டுபிடிக்கப்பட்டவை.

பொர்ரா குகைகளின் (ஆந்திரம்) பிரம்மாண்டம்தான் அதன் கவர்ச்சி. குகை முழுக்க விளக்குகள். பொர்ரா ஒரு குகை நகரம். உள்ளேயே குட்டி மலைகளும், ஓடைகளும், பாதைகளும், சாலைகளும் கொண்டது.

கைகளை மடித்து லய பாவனையில் வைக்காது பெருக்கல் போல் வைத்திருக்கும் புத்தர் சிலை உள்ள போஜ்ஜனம் கொண்டா மலை, குன்று முழுக்க தூபிகள் கொண்ட லிங்கலங்கொண்டா மலை தரிசனமும் இப் பயணக்கட்டுரையின் இறுதியில் கிடைக்கிறது. புதிய அனுபவம் தரும் நூல்.

நன்றி: தினமணி, 27/11/2017

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *