எம்.ஜி.ஆர்.
எம்.ஜி.ஆர்., முனைவர் ராஜேந்திரன், மெரினா புக்ஸ், விலைரூ.1800
தமிழ்த்திரை உலகில் புரட்சி நடிகராக, தமிழக ஆட்சி கட்டிலில் முதல்வராக, பொன்மனச் செம்மலாக, ஏழைப் பங்காளனாக விளங்கிய மருதுார் கோபால ராமச்சந்திரன் என்ற எம்.ஜி.ஆரின் வாழ்க்கை நிகழ்வுகளை முழுமையாக தொகுத்து எழுதப்பட்டுள்ள நுால். குடும்ப உறுப்பினராக நேரில் சந்தித்த அனுபவம், எம்.ஜி.ஆர்., அளித்த பேட்டிகள், அவருடன் பழகியவர்கள் தந்த அனுபவக் கட்டுரைகள், அரசு மற்றும் சினிமா துறை சார்ந்த ஆவண ஆதாரங்களின் துணை கொண்டு தொகுத்து எழுதப்பட்டுள்ளது.
எம்.ஜி.ஆர்., வாழ்வில் திருப்பு முனைகளைக் காட்டும் போட்டோக்களும், ஆவணங்களும் இணைக்கப்பட்டுள்ளன. அவர் நடித்த பட விபரங்களும் முழுமையாக தரப்பட்டுள்ளன. எம்.ஜி.ஆரின் கொடை உள்ளம், குடும்பம் சார்ந்த நெகிழ்வுகள் எல்லாம் தெளிவாக விவரிக்கப்பட்டு உள்ளன. நுாலை எழுதியவர் எம்.ஜி.ஆரின் உறவினர். அவரது தனிப்பட்ட அனுபவம் முதல் கட்டுரையில் உள்ளது. அதில், எம்.ஜி.ஆரின் கருணையும் கனிவும், நெகிழ்வும் நிரம்பியுள்ளது.
தொடர்ந்து எம்.ஜி.ஆர்., திருமணப் பதிவு பற்றிய கட்டுரை தனித்தன்மையுடன் உள்ளது. அதில் அவரது மனைவி ஜானகியின் வாழ்க்கை குறிப்பும் இணைந்துள்ளது. திருமண பதிவு சான்றிதழ் நகல் படமும் உள்ளது. அடுத்து, புரட்சி நடிகரை, புரட்சித் தலைவராக்கிய மக்கள் என்ற தலைப்பில் ஒரு கட்டுரை உள்ளது. பெரும்பாலான தகவல்கள், தேதி ஆண்டு வாரியாக துல்லியமாக இடம் பெற்றுள்ளன.
சத்யா ஸ்டுடியோ, ராமாவரம் தோட்டம் பற்றிய விபரங்கள் விரிவாக உள்ளன. எம்.ஜி.ஆரின் முக்கிய பேச்சு, எழுத்துகள், திரையில் பேசிய முக்கிய வசனங்கள், திருப்பம் தந்த திரைப் பாடல்கள், நெருக்கமான பிரபலங்களின் அனுபவப் பகிர்வுகள் என வரலாற்றுப் பதிவுகள் நுால் முழுக்க நிறைந்து கிடக்கின்றன.
எம்.ஜி.ஆர்., என்ற ஆல மரம் தமிழகம் முழுதும் பரந்து விரிந்தது. அதன் கிளையில், நிழலில் தங்கியவர்களை அளவிட முடியாது. அவரது கனிவைப் போற்றும் தொண்டர்கள் ஏராளமாக உள்ளனர். அவர்களுக்கு, எம்.ஜி.ஆரின் வாழ்க்கையில் முக்கிய பகுதிகளை வெளிப்படுத்தும் வகையில் அமைந்துள்ளது. அற்புத வண்ணப் படங்களுடன், தரமான தாளில் நேர்த்தியான அச்சில் அமைந்துள்ள அபூர்வ நுால்.
– மலர்
நன்றி: தினமலர், 6/3/22.
இந்தப் புத்தகத்தை வாட்ஸப்பில் ஆர்டர் செய்ய: 9500045609
இந்தப் புத்தகத்தை போன் மூலம் வாங்க: டயல் ஃபார் புக்ஸ் – 04449595818