மாவீரன் அலெக்சாண்டர்

மாவீரன் அலெக்சாண்டர், எஸ்.எல்.வி. மூர்த்தி, சிக்ஸ்த்சென்ஸ் பதிப்பகம், பக். 312, விலை 235ரூ.

ஆயிரம் தன்னம்பிக்கை நூல்களை வாசிப்பதும் ஒன்றுதான்… கிரேக்கப் பேரரசன் அலெக்சாண்டரின் வாழ்க்கையைப் படிப்பதும் ஒன்றுதான் என்ற வரிகளுடன் தொடங்குகிறது இந்தப் புத்தகம்.

பொதுவாகவே, வரலாற்று நாயகர்களின் வாழ்க்கையைப் பிரதிபலிக்கும் படைப்புகளை கட்டுரை வடிவிலேயே பார்த்து பழகிய நமக்கு, இந்தப் புத்தகம் சற்று மாறுபட்டதாகத் தோன்றுகிறது. கிட்டத்தட்ட ஒரு கதையைப் படிப்பது போன்ற உணர்வையே தருகிறது இந்நூல்.

33 யுகங்கள் எடுத்தாலும் அடைய முடியாத சாதனைகளை வெறும் 33 ஆண்டுகளில் வென்றெடுத்த அலெக்சாண்டரின் வாழ்க்கைப் பயணத்துக்குள் நம்மை அழைத்துச் செல்கிறார் நூலாசிரியர்.

அலெக்ஸாண்டர் என்ற மனிதனை போர்த் தலைவனாகவும், உலகை வெல்லத் துடிக்கும் பேராசைக்காரனாகவும் மட்டுமே மானுடம் அறிந்திருக்கிறது. அந்த பிம்பத்தை உடைத்தெறிந்து அந்த மாவீரனின் மற்றொரு முகத்தை வெளிச்சமிட்டுக் காட்டுகிறது இந்நூல்.

மண்ணை ஆளத் துடித்த அலெக்ஸாண்டருக்குள், திண்ணையில் படுத்துறங்கும் ஏழையாக வாழ வேண்டும் என்ற எண்ணம் இருந்ததும், அதுதொடர்பாக பல யோகிகளை அவர் சந்தித்ததும் விவரிக்கப்பட்டுள்ளது. இப்படி அறியப்படாத பல தகவல்கள் நூலில் இடம்பெற்றுள்ளன.

வாழ்க்கைச் சம்பவங்கள் கால வரிசைப்படி தனித் தனிப் பகுதியாக கொடுக்கப்பட்டிருப்பதும், வழக்கமான வரலாற்று நூலாக அல்லாமல் எளிய நடையில் இருப்பதும் கூடுதல் சிறப்பு.

நன்றி: தினமணி, 28/8/2016.

Leave a Reply

Your email address will not be published.