மாவீரன் சிவாஜி
மாவீரன் சிவாஜி, கோவிந்த் பன்சாரே, தமிழில் செ. நடேசன், விஜய் ஆனந்த் பதிப்பகம்.
கொள்ளையில் பங்கு இல்லை!
கோவிந்த் பான்சாரே எழுதி, தமிழில் செ. நடேசன் மொழி பெயர்த்த,‘மாவீரன் சிவாஜி’ நூலை சமீபத்தில் படித்தேன். விஜய் ஆனந்த் பதிப்பகம் வெளியிட்டு உள்ளது. சிவாஜியைப் பற்றி பல்வேறு கோணங்களில், பல்வேறு வரலாற்று செய்திகளை பலர் சொல்லியும், எழுதியும் உள்ளனர். இவற்றில், பெரும்பாலான செய்திகள், இட்டுக்கட்டி சொல்லப்பட்டதான கருத்தே நிலவுகிறது. இந்நிலையில், கோவிந்த் பன்சால் எழுதிய, இந்நூல் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது.
மத்திய கால இந்திய வரலாற்றில், சிவாஜியின் பங்கு மிக முக்கியமானது. 16ம் நூற்றாண்டின் இறுதியில், அவர் மேற்கொண்ட நிர்வாக முறை, இன்றைய அரசியல் சூழலுக்கு மிகவும் பொருத்தமாக உள்ளது. அரசனின் காலம் என்பது, போர் வெற்றி, தோல்விகளை அடிப்படையாக கொண்டிருக்கும். சிவாஜியின் காலம் அதற்கு மாறுபட்டு இருந்தது என்கிறார் நூலாசிரியர்.
சிவாஜி நிரந்தரமாக படைப்பிரிவை வைத்திருக்கவில்லை. படை வீரர்கள் முக்கால்வாசிப் பேர் விவசாயிகளே. படைக்குத் தேவைப்படும் போது, அவர்கள் அழைக்கப்படுவர். போர் நடக்கும்போது, அந்நாட்டின் வளங்களை கொள்ளையடிப்பதே முக்கியமாக இருக்கும். சிவாஜி அப்படி செய்யவில்லை. அதற்கு, வீரர்களாக இருந்த விவசாயிகளும் ஒரு காரணம். பயிர்களை சேதப்படுத்துதல், பெண்களை புணருதல், உடைமைகளை சூறையாடுதல் போன்ற வேலைகளை விவசாயிகள் செய்யமாட்டார்கள்.
‘போருக்குச் செல்லும் நாட்டில், குதிரைக்கு புல் வேண்டுமானாலும், அதை காசு கொடுத்தே வாங்க வேண்டும். அந்நாட்டில் இருக்கும் இலை, தழைகளைக் கூட பறிக்கக் கூடாது’ என, வீரர்களுக்கு சிவாஜி உத்தரவிட்டதாக, நூலாசிரியர் குறிப்பிடுகிறார். சிவாஜி நடத்திய போரின்போது, ஒரு நாட்டின் வளங்கள் கொள்ளை அடிக்கப்படவில்லை. அதனால், போருக்குப் பின் நடக்கும், கொள்ளையில் பங்கு என்ற பேச்சுக்கே இடமும் இல்லை. 1671ல் சிவாஜி செயல்படுத்திய இந்த நடைமுறை, இன்றைய ஆட்சி நிர்வாகத்தில் இல்லை என்பது வேதனையான விஷயம்.
சிவாஜி காலத்தில், சூரத்தில் கொள்ளை நடந்தது என குறிப்பிடும் நூலாசிரியர், செல்வந்தர்களிடம் நடந்த அந்த கொள்ளை, செல்வத்தை பரவலாக்க நடந்தது என்கிறார்.
-ம. காமுதுரை
(எழுத்தாளர்)
நன்றி: தினமலர், 29/5/2016.