மதுரை நகரக் கோவில்கள்

மதுரை நகரக் கோவில்கள், டி.வி.எஸ்.மணியன், அமராவதி பதிப்பகம், பக். 200, விலை 130ரூ.

கோவில் இல்லா ஊரில் குடியிருக்க வேண்டாம்’ என்றார் அவ்வையார். கோவில் நகரம் என்றே அன்று முதல் இன்று வரை போற்றப்படுவது மதுரை மாநகரம். இங்குள்ள, 20 கோவில்களின் விபரங்களை இந்த நுால் அழகுடன் விளக்குகிறது.

இலக்கிய வளமும், வரலாற்றுச் சிறப்பும் மிக்க, மீனாட்சி அம்மன் கோவில், திருப்பரங்குன்றம் முருகன் கோவில், அழகர் கோவில் போன்ற புகழ்மிக்க கோவில்களின் விளக்கங்கள் அருமை.

மதுரை மீனாட்சி கோவிலில், குலசேகரப் பாண்டியன் வரலாறு, 64 திருவிளையாடல்கள், மலயத்துவசன் வரலாறு, மீனாட்சி திருமணம், வைகை, ‘புலவர் நாவில் பொருந்திய பூங்கொடி, வையை என்ற பொய்யாக் குலக்கொடி’ சிலப்பதிகாரத்தில் போற்றப்படுபவை சிறப்பாகத் தரப்பட்டுள்ளன.

கால் மாறி ஆடிய வெள்ளியம்பல, நடராஜர் படமும் செய்தியும் படிப்பவரைக் கவர்கின்றன. இந்திரன் கட்டியது இக்கோவில் என்றும் கூறுகிறார். ஆயிரங்கால் மண்டபத்தில் தலை மட்டும் ஆண், கழுத்தின் கீழ் பெண்ணுமாக உள்ள சிலை நம்மை கவர்கிறது.

பிரசன்ன வேங்கடேசர், மதனகோபாலர், வடக்கு கிருஷ்ணன், ஸ்ரீநிவாசர், வீரராகவர் பெருமாள் கோவில்கள் பற்றிய விவரங்கள் உள்ளன.

மாரியம்மன், திரவுபதி அம்மன், காமாட்சி அம்மன், தசகாளி அம்மன் ஆகிய கோவில்கள் மதுரைக்குப் பெருமை சேர்க்கின்றன.

இம்மையின் நன்மை தருவார், பழைய சொக்கநாதர், திருஆப்பனுார் ஆகிய சிவாலயங்கள் சிறப்புடன் திகழ்கின்றன. 70 ஆண்டு முத்தமிழ் விழா நடக்கும் அரச மரத்தடி விநாயகர் பெருமை, அருமை. மதுரை மாநகர கோவில் கையேடு.

– முனைவர் மா.கி.ரமணன்

நன்றி: தினமலர், 3/12/2017.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *