மகாபாரதக் கதைகள்

மகாபாரதக் கதைகள், ஆர். கல்யாண மல்லி, அழகு பதிப்பகம், பக். 200, விலை 165ரூ.

மனித வாழ்க்கையில் தோன்றும் பல்வேறு பிரச்னைகளையும் எப்படி எதிர்கொண்டு வாழ வேண்டும் என்ற வழிமுறைகளைக் கூறுபவைதான் ராமாயணம், மஹாபாரதம் போன்ற இதிகாசங்கள். குறிப்பாக பெண்ணாசையும், மண்ணாசையும் இல்லாத மனிதர்களைக் காண்பது அரிது.

அவை முறையற்றதாக இருந்தால், என்ன மாதிரியான விளைவுகளை ஏற்படுத்தும் என்பதை, பல்வேறு கதாபாத்திரங்களைக் கொண்டு விளக்கி, மனித வாழ்க்கைக்குரிய அறத்தைப் போதிப்பதால், இவை இன்றும் போற்றப்படுகின்றன.

மஹாபாரதம் முடிந்த சமயத்தில்தான் கலியுகம் பிறந்ததாகக் கூறப்படுகிறது. பாண்டவர்கள், கௌரவர்கள், திரௌபதி, கிருஷ்ணர் – என்ற முக்கிய கதாபாத்திரங்களைச் சுற்றி எண்ணற்ற கதாபாத்திரங்கள் உலவுகின்றன. சுமார் ஒரு லட்சம் ஸ்லோகங்களைக் கொண்ட மஹாபாரதம் வேதவியாஸர் முனிவரால் இடைவெளி இல்லாமல் கூறப்பட்டு, வினாயக மூர்த்தியால் எழுதப்பட்டதாகவும் கூறப்படுகிறது.

இந்நூல், மஹாபாரதத்தை ஆரம்பம் முதல் இறுதிவரை கூறினாலும், அடிப்படை விஷயங்களையும், அவற்றின் நிகழ்வுகளையும் சுருக்கமாகவும், எளிய தமிழ்நடையிலும் எடுத்துரைக்கிறது. இந்த இதிகாசத்தின் தலைமகனான பீஷ்மர் உருவான காரணம் முதல், பாண்டவர்களுக்கும் கௌரவர்களுக்கும் இடையே நடந்த போருக்கான அனைத்து விஷயங்களும், அதன்பிறகு பாண்டவர்களின் முடிவு, கிருஷ்ணரின் முடிவு என்று இறுதிவரை நிகழ்ந்தவற்றை எல்லாம் இந்நூல் எடுத்துரைக்கிறது.

-பரக்கத்.

நன்றி: துக்ளக், 26/4/2017.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *