மகாசக்தி மனிதர்கள்

மகாசக்தி மனிதர்கள், என். கணேசன், தினத்தந்தி பதிப்பகம், பக். 272, விலை 200ரூ.

நம் இந்திய நாட்டு யோகிகளும், சித்தர்களும் கற்பனைக்கும் எட்டாத அபூர்வ சக்திகளைப் பெற்றவர்களாக இருந்திருக்கின்றனர். நம்மை அவர்கள்பால் வசீகரிப்பது அவர்கள் செய்து காட்டிய அற்புதங்கள் தான். இந்த மகாசக்தி படைத்த மனிதர்களில் ஏற்கனவே மிகவும் அதிகமாக அறியப்பட்ட பெயர்களோடு, பொதுவில் அதிகம் அறியப்படாத யோகிகள் பலர் புரிந்த அற்புதச் செயல்களை மிக விரிவாக இந்த நூலில் எழுதியிருக்கிறார் ஆசிரியர்.

அவற்றைப் படிக்கும்போது, நமக்கு ஏற்படும் பிரமிப்பும், ஆச்சரியமும் அளவிட முடியாதவை. அவை வெறும் கட்டுக் கதைகள் அல்ல; பிரபலமான அறிஞர்கள், பிரபுக்கள் ஆகியோர் முன்னிலையில் நிகழ்த்திக் காட்டப்பட்டவை. பால் பிரண்டன் என்ற அகில உலகப் புகழ் பெற்ற இங்கிலாந்து தத்துவ ஞானியின் முன்னிலையில், இறந்து போன ஒரு குருவியின் உயிரைத் திரும்ப வரவழைத்துக் காட்டிய விசுத்தானந்தர், பிரபல விஞ்ஞானி சர் சி.வி.ராமன் கண்ணெதிரே கந்தக அமிலம், சார்பாலிக் அமிலம், பொட்டாசியம் சயனைடு ஆகியவற்றை அனாயசமாய் கையால் எடுத்து, வாயிலிட்டு விழுங்கி அவற்றால் எந்தப் பாதிப்பும் இல்லாமல் சர்வ சாதாரணமாய் உலாவிய யோகி நரசிங்க சுவாமி, 300 பவுண்டும், மிகவும் பருத்த உடலும் படைத்த த்ரைலங்க சுவாமி, கங்கை நீரில் மூழ்காமல் அதன் மேற்பரப்பில் அமர்ந்தும், படுத்தும், மிதந்தும் செய்து காட்டிய வித்தைகள். அந்தரத்தில் படுத்துக் காட்டிய சுப்பையா புலவர் போன்ற பலரது யோக சாதனைகளை ஆசிரியர் விவரிக்கும்போது, நாம் வியப்பின் உச்சிக்கே சென்று விடுவோம்!

இவையாவற்றையும் விட மகாராஜா ரஞ்சித் சிங் முன்னிலையில் யோகி ஹரிதாஸ் செய்து காட்டிய அற்புதம், உலக அளவில் பேசப்பட்ட ஒன்று.
ஆனால், பக்கம், 214ல் உள்ள படத்தில் குறிப்பிட்டபடி அது, சதாசிவ பிரம்மேந்திரர் படம் அல்ல; மகான் ஸ்ரீதர அய்யாவாள் என்பவரது படமாகும். இதை அடுத்த பதிப்பில் திருத்திக் கொள்ளலாம்.

-மயிலை சிவா.

நன்றி: தினமலர், 8/1/2017

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *