மக்கள் தொடர்புக் கலை
மக்கள் தொடர்புக் கலை, எஸ்.பி. எழிலழகன், நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் (பி) லிட், பக். 204, விலை 160ரூ.
மக்களின் எண்ணங்களை அரசுக்கும், அரசின் எண்ணங்களை மக்களுக்கும் தெரிவிப்பது ஊடகம் என்று என்.டபிள்யூ. பி. கிரேவ் தெரிவித்துள்ள கருத்தை மையமாகக் கொண்டு படைக்கப்பட்டுள்ளது மக்கள் தொடர்புக் கலை என்னும் இந்நூல்.
மக்கள் தொடர்பு பற்றிய அறிமுகத்தை விரிவாக விளக்கும் வகையில் இந்த நூலை எளிய மொழிநடையில் படைத்துத் தந்துள்ளார் எஸ்.பி. எழிலழகன். மொத்தம், 22 தலைப்புகளில் அமைந்துள்ள இந்த நூலில், மக்கள் தொடர்புக் கோட்பாடுகளைப் பற்றி எழுதிக் குழப்பாமல் பொதுமக்கள் புரிந்து கொள்ள வேண்டிய தகவல்களை மட்டும் படங்களுடன் விளக்கியிருக்கும் விதம், பாராட்டிற்கு உரியது.
இதழ்களில் வெளிவரும் விளம்பரங்களின் பல்வேறு வகைகளைத் தெளிவாக விளக்கியுள்ளதுடன் தொலைக்காட்சி, வானொலி விளம்பரங்கள் குறித்தும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழக அரசின் செய்தி மக்கள் தொடர்புத் துறையில், கூடுதல் இயக்குனராகப் பணியாற்றிய அனுபவம் இந்த நூலைப் படைப்பதற்கு எஸ்.பி.இளவழகனுக்குப் பயன்பட்டிருக்கிறது. இந்த நூலாசிரியர் நிர்வாகப் பணியில் இல்லாமல் ஆசிரியர் பணிக்குச் சென்றிருந்தாலும் புகழ் பெற்றிருப்பார் என்பதை எடுத்துக் காட்டுகிறது.
-முகிலை ராசபாண்டியன்.
நன்றி: தினமலர், 25/6/2017.