மலையாற்றூர் ராமகிருஷ்ணனின் நாவல்கள் பகுதி 1

மலையாற்றூர் ராமகிருஷ்ணனின் நாவல்கள் பகுதி 1, தமிழில் குறிஞ்சிவேலன், கண்மணி கிரியேட்டிவ் வேவ்ஸ், பக். 656, விலை 410ரூ.

கார்ட்டூனிஸ்ட், சிறுகதை எழுத்தாளர், நாவலாசிரியர், திரைக் கதாசிரியர், ஓவியர் என பன்முகப் பரிமாணங்களைக் கொண்டவர் மலையாற்றூர் ராமகிருஷ்ணன். அவருடைய ஐந்து நாவல்கள் இரு தொகுப்புகளாக வெளி வந்துள்ளன.

முதல் தொகுப்பில் மூன்று நாவல்களும், இரண்டாவது தொகுப்பில் இரு நாவல்களும் இடம்பெற்றுள்ளன. பங்களா கட்ட பூர்வீக வீட்டையும், நிலத்தையும் விற்கச் செல்லும் ஐஏஎஸ் அதிகாரி, அவற்றை விற்காமல் திரும்பும் கதை “சல்லி வேர்கள்‘’.

சுதந்திரப் போராட்ட வீரரின் ஒரே கோரிக்கையைக் கூட நிறைவேற்றாத சுதந்திர இந்தியாவைப் படம் பிடித்துக் காட்டும் நாவல் “ஐந்து சென்ட் நிலம்‘’. இந்த இரு நாவல்களும் நனவோடை உத்தியில் அமைந்த படைப்புகளாகும். செல்வந்தரான தந்தையால் ஆணாக வளர்க்கப்பட்ட மகளின் கதை “காட்டு வெளியினிலே‘’.

ஒவ்வொரு படைப்புக்கும் வித்தியாசமான கதைக் கருவை ஆசிரியர் கையாண்டிருப்பது வாசிப்பில் விறுவிறுப்பைத் தக்க வைக்கிறது.

உளவியலும் மர்மமும் நிறைந்த “ஒரு நெஞ்சத்தின் ஓலம் நாவல்‘’ ஆங்கிலத்திலும் மொழிபெயர்க்கப்பட்டுள்ளது. இத்தொகுதியில் 500 பக்கத்துக்கு மேல் எடுத்துக் கொண்டுள்ள பெரிய நாவல் “ஆறாம் விரல்‘’. வேதராமன் என்ற மனிதனில் இயல்பாக ஏற்படும் தீர்க்கதரிசன புலனறிவை ஆன்மிகப் போர்வையால் மூடி, அவனை அவதாரமாக்கி அரசியல்வாதிகளும், பெரும் தொழிலதிபர்களும் எவ்வாறு ஒரு மூலதனப் பொருளாகப் பயன்படுத்திக் கொள்கிறார்கள் என்பதே இந்த நாவலின் கரு.

குறிஞ்சிவேலனின் மொழிபெயர்ப்பு, வாசகர்களை வசப்படுத்தும் வகையில் அமைந்திருப்பது சிறப்பு.

நன்றி: தினமணி, 17/10/2016.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *