அறத்தந்தை அண்ணாமலை அரசர்

அறத்தந்தை அண்ணாமலை அரசர், மு.அருணாசலம் பிள்ளை, பதிப்பாசிரியர் ஆறு. அழகப்பன், முல்லை பதிப்பகம், பக். 144, விலை 100ரூ.

அன்ன சத்திரம் கட்டுவதைவிட கல்விக்கூடம் அமைப்பது புண்ணியம் தருவது என்று கூறுவர். ஆனால், அன்ன சத்திரமும் கட்டி, கல்விக்கூடங்களையும் அமைத்து, மருத்துவசாலைகளையும் ஏற்படுத்தி, தமிழிசைக்கென சங்கம் நிறுவி, கோயில்களை உருவாக்கி குடமுழுக்கும் செய்வித்து, அரசாங்கப் பணியலமர்ந்து மக்கள் பணியும் மேற்கொண்ட ஒருவர் உண்டென்றால் அவர் அரசர் அண்ணாமலை செட்டியாராகத்தான் இருக்க முடியும். அவருடைய வரலாறு சுருக்கமாகவும் சுவையாகவும் இந்நூலில் கூறப்பட்டுள்ளது.

ஆந்திரத்திலும், கர்நாடகத்திலும் தனித்தனியே பல்கலைக்கழகங்கள் இருந்தபோதிலும் தமிழருக்கென ஒரு பல்கலைக்கழகம் இல்லாமையால், தாமே முயன்று தமிழகத்தின் முதல் பல்கலைக்கழகமாக அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தை உருவாக்கினார். மீனாட்சி தமிழ்க் கல்லூரியை உருவாக்கியதோடு, மீனாட்சி வடமொழிக் கல்லூரியையும் உருவாக்கியது, சைவ மரபினரான அவர் தில்லை கோவிந்தராசர் கோயிலைப் புனரமைத்து குடமுழுக்கு செய்வித்தது, வீட்டிலேயே அடைந்து கிடக்கும் பெண்களின் நிலையை மாற்ற எண்ணி பெண்களுக்கென லேடி வெல்லிங்டன் பெயரில் கிளப் அமைத்தது, பெண்கள் பொது இடங்களுக்குச் செல்லக்கூடாது என்று இருந்த நிலையை மாற்ற தனது வெளிநாட்டுப் பயணத்தின்போது மனைவியையும் உடன் அழைத்துச் சென்றது போன்ற செயல்களால் அவரின் துணிவான முற்போக்குச் சிந்தனையை அறிய முடிகிறது.

தான் நிறுவிய மீனாட்சி தமிழ்க் கல்லூரியின் தலைவராக உ.வே.சாமிநாதையரை நியமித்ததும், அங்கு விபுலானந்த அடிகள், சோமசுந்தர பாரதியார், மு. கதிரேசச் செட்டியார், கா. சுப்பிரமணிய பிள்ளை, தெ.பொ.மீனாட்சி சுந்தரம் பிள்ளை, ரா.பி. சேதுப்பிள்ளை, ரா. இராகவையங்கார், ந.மு. வேங்கடசாமி நாட்டார் முதலிய தமிழறிஞர்களைப் பணியிலமர்த்தியதும் அண்ணாமலையரசரின் தமிழ்க்காதலுக்கான சான்றுகள். அவருடைய வாழ்க்கை வரலாற்றை தமிழர்கள் அனைவரும் அவசியம் அறிந்து கொள்ள வேண்டும்.

நன்றி: தினமணி, 17/10/2016.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *