மலையாளம் தமிழ் இலக்கிய மொழி பெயர்ப்புகள்
மலையாளம் தமிழ் இலக்கிய மொழி பெயர்ப்புகள், ப.விமலா, காவ்யா, பக்.342, விலை ரூ.340.
மலையாளத்திலிருந்து தமிழில் நிறைய நூல்கள் மொழிபெயர்க்கப்பட்டிருக்கின்றன. மொழிபெயர்ப்பாளர்களும் பலர் இருக்கின்றனர். அவர்களில் குளச்சல் மு.யூசுப், குறிஞ்சிவேலன், சிற்பி பாலசுப்பிரமணியம் ஆகிய மூவரின் 55 மொழிபெயர்ப்பு நூல்களை மட்டுமே இந்நூல் ஆய்வுக்கு எடுத்துக் கொள்கிறது.
மலையாளத்தின் புகழ்மிக்க எழுத்தாளர்களான தகழி சிவசங்கரபிள்ளை, வைக்கம் முகம்மது பஷீர், எம்.டி.வாசுதேவன் நாயர், மலையாற்றூர் இராமகிருஷ்ணன், எஸ்.கே.பொற்றேகாட், ஓ.என்.வி.குரூப், கே.சச்சிதானந்தன் உட்பட பல எழுத்தாளர்களின் படைப்புகளைப் பற்றிய விரிவான அறிமுகம் வியக்க வைக்கிறது. என்னவிதமான படைப்புகள் மலையாளத்தில் எழுதப்படுகின்றன என்பது நமக்குத் தெரிய வருகிறது.
அந்தப் படைப்புகள் காட்டும் மக்களின் வாழ்க்கை, படைப்புகள் வெளிவந்த காலத்தின் சமுதாயச் சூழல், படைப்புகள் ஏற்படுத்திய தாக்கம் எல்லாம் இந்நூலில் விரிவாகப் பேசப்படுகின்றன. மலையாள இலக்கியத்தைப் பற்றித் தெரிந்து கொள்ளும் அதே நேரத்தில் கேரள மக்களின் சமூக, பொருளாதார, அரசியல், கலாசார வாழ்க்கையையும் தெரிந்து கொள்ள முடிகிறது.
பின்னிணைப்பாக மலையாள படைப்பாளிகளைப் பற்றிய அறிமுகம், மொழிபெயர்ப்பாளர்கள் மூவரின் நேர்காணல்கள் இடம் பெற்றிருப்பதும் சிறப்பு.
நன்றி: தினமணி, 12-6-2017.