மார்க்ஸ் எப்படி இருப்பார்?

மார்க்ஸ் எப்படி இருப்பார்?, எஸ்.தோதாத்ரி, நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் (பி) லிட், பக்.140, விலை ரூ.120.

2013 இலிருந்து 2016 வரை மூன்றாண்டுகளில் நூலாசிரியர் எழுதிய 27 கட்டுரைகளின் தொகுப்பு இந்நூல். எல்லாக் கட்டுரைகளும் காரல் மார்க்ஸுடனும், மார்க்சியத்துடனும் தொடர்புடையவை.

மார்க்ஸ் என்ற மனிதரின் தோற்றம், உழைப்பு, பழக்க, வழக்கங்கள், பண்புகள், அவருக்குப் பிடித்தமான நூல்கள், அவருடைய மனைவி ஜென்னியிடம் அவர் கொண்டிருந்த ஆழமான காதல் என முதல் நான்கு கட்டுரைகள் மார்க்ஸ் என்ற மனிதரைப் பற்றியவையாக உள்ளன.

மார்க்ஸ் காலத்தில் வாழ்ந்த அவருடைய கருத்துநிலை வளர்ச்சிக்கு ஏதோ ஒருவிதத்தில் காரணமாக இருந்த செயிண்ட் சைமன், ராபர் ஓவன், புருதோன், டார்வின் ஆகியோரைப் பற்றிய கட்டுரைகளும் இடம் பெற்றுள்ளன.

உயிரியல்துறையில் டார்வினின் பரிணாமக் கோட்பாட்டின் முக்கியத்துவத்தைப் போலவே அரசியல், பொருளாதாரத்துறையில் காரல் மார்க்ஸின் இயங்கியல் அடிப்படையிலான வரலாற்றுப் பொருள்முதல் வாதம் முக்கியத்துவம் பெற்றிருப்பதைத் தெரிந்து கொள்ள முடிகிறது.

மார்க்ஸ் அரசியல், பொருளாதாரத்துறையில் மார்க்சியத்தை வளர்த்தார் என்றால், அவருடைய நிழலாக இருந்த அவருடைய நண்பர் ஏங்கெல்ஸ், மார்க்ஸ் தொடாத அறிவியல்துறை சார்ந்தவற்றில் ஆராய்ச்சி செய்து இயற்கையின் இயங்கியல்என்ற நூலை எழுதியிருக்கிறார்.

மார்க்ஸின் நூல்களைப் பதிப்பித்திருக்கிறார். மார்க்ஸுக்குப் பிறகு மார்க்சியத்தை வளர்த்த பிளக்கனாவ், லெனின், ஸ்டாலின் ஆகியோரின் பங்களிப்புகள் பற்றிய கட்டுரைகள் புதிய வெளிச்சம் பாய்ச்சுகின்றன.

மார்க்சியத்தைப் புரிந்து கொள்வது எப்படி? மார்க்சியம், பெரியாரியம், அம்பேத்கர் சிந்தனைகள், பெண்ணியம் என எல்லாவற்றையும் ஒரே நேரத்தில் ஒருவர் சமமாகக் கருதி பின்பற்ற முடியுமா? மார்க்சியத்துக்கு மாறான வலது, இடது போக்குகள், புதிய இடதுகளின் சிந்தனை முறை, பின்நவீனத்துவத்தை மார்க்சிய கண்ணோட்டத்தில் எவ்வாறு அணுகுவது? தொழிலாளி வர்க்கம் இல்லாமல் சமூக மாற்றம் சாத்தியமா? இப்போது மார்க்சியம் எவ்வாறு பொருத்தமுடையதாக இருக்கிறது? என்பன போன்ற பல வினாக்களுக்கு இந்நூல் தெளிவாக பதில் கூறுகிறது. மார்க்சியத்தைப் புரிந்து கொள்ளவும், கற்கவும் வழிகாட்டும் அரிய நூல்.

நன்றி: தினமணி, 26/2/2018.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *