மழைவில் மனிதர்கள்
மழைவில் மனிதர்கள், ஜெயந்தஸ்ரீ பாலகிருஷ்ணன், செந்தில் பதிப்பகம், பக்.240, விலை ரூ.200.
சின்னஞ்சிறு வயது முதல் ஏறத்தாழ ஐம்பதாண்டுகாலம், தன் வாழ்வில் நடந்த நிகழ்வுகளை அசாத்தியமான நினைவாற்றலுடன் அழகுறப் படம்பிடித்துக் காட்டியிருக்கிறார் நூலாசிரியர்.
மனிதர்களோடும், பிராணிகளோடும், பறவைகளோடும், பூச்சிகளோடும், தூக்கத்தோடும், தும்மலோடும், குறட்டையோடும், கொட்டாவியோடும், சப்தத்தோடும், நிசப்தத்தோடும், ஒட்டடையோடும் பின்னிப்பிணைந்திருக்கின்றன இந்த அனுபவ வெளிப்பாடுகள்.
ஆடு மேய்க்கும் பாட்டி, “பூவுதான் ரெண்டு பூக்கும்; நாவு ரெண்டு பேசுமா?‘’ என்பதும், “திருமணங்களைப் பற்றித் தெரியாது; ஆனால், விடுமுறைகள் சொர்க்கத்தில் நிச்சயிக்கப்பட்ட காலம் அது’‘ என்று சிறுவயது விடுமுறையைச் சிலாகிப்பதும், “என் பேனா ஒரு திருநீலகண்டர்; அதன் கழுத்தில் நீல இங்க் கசிந்துகொண்டே இருக்கும்’‘, “காபி குடிக்கும் பசுமாடு’‘ம், சிறுவர்களின் “சகாவு சாமி‘’யும் மறக்கமுடியாத பதிவுகள்.
“நன்றி கூறி விடைபெறுவது‘’, “திறந்திடு செஸமே‘’ ஆகியவற்றில் வரும் நாய்க்குட்டியும், மைதிலி அத்தையும் கண்கலங்க வைக்கிறார்கள். சொல்லாடலில் லா.ச.ரா.வின் சாயல் தெரிகிறது. பாதுகாக்க வேண்டிய நூல்.
நன்றி: தினமணி, 25/9/2016.