தேவார மூவர் அருளிய செய்யுளியல்

தேவார மூவர் அருளிய செய்யுளியல், ம,வே. பசுபதி, தெய்வத்திருமகள், விலை 150ரூ.

செய்யுள் இயற்றுவதும், மரபுக் கவிதை இயற்றுவதும் இன்றைக்கு அருகிப்போய் வருவதால், “யாப்பு’ என்றால் என்னவென்று மாணவர்கள் கேட்கும் நிலை உள்ளது. காலத்திற்கேற்ற நூலாக இது வெளிவந்திருப்பது சிறப்பு.

தேவார மூவரான திருஞானசம்பந்தர், திருநாவுக்கரசர், சுந்தரமூர்த்தி சுவாமிகள் ஆகியோரின் தேவாரப் பாடல்களில் கையாளப்பட்டுள்ள செய்யுளியல் குறித்து விரிவாகப் பேசுகிறது இந்நூல். மூவர் தேவாரங்களையும் தோத்திரப் பாடல்களாக மட்டும் பார்க்காமல், இலக்கணக் கண்கொண்டு ஆராய்ந்திருப்பது பக்தி இலக்கியத்திற்குக் கிடைத்த மிகச்சிறந்த இலக்கண நூல் இதுவென்று கூறலாம்.

தொல்காப்பியத்தில் மூன்றாவது அதிகாரமான பொருளதிகாரத்தில் “செய்யுளியல்’ பற்றித் தொல்காப்பியர் கூறியுள்ளார். செய்யுள் இயற்றுவதற்கான அனைத்து இலக்கண மரபுகளும்(செய்யுள் உறுப்புகள், அசை, சீர், அடி, தொடை, யாப்பு, மரபு, தூக்கு, நோக்கு, ஓசை, பாவகை) இவ்வியலில் கூறப்பட்டுள்ளன. “செய்யுள் பாடவல்லார் சிவலோகஞ் சேர்வாரே’ என்பது ஞானசம்பந்தர் வாக்கு. அத்தகைய செய்யுள், தொல்காப்பிய செய்யுளியல் இலக்கண மரபுக்கு உட்பட்டிருப்பது அவசியம்!

மூவர் பெருமக்கள் இலக்கிய – இலக்கண வகைகள் பலவற்றையும் பயன்படுத்தி, மாலைமாற்று, எழுகூற்றிருக்கை, குறள்தாழிசை, கலி விருத்தம், வஞ்சி விருத்தம், கட்டளைக்கலித்துறை, திருத்தாண்டகம், திருக்குறுந்தொகை, தரவு கொச்சகக் கலிப்பா, கலித்துறை, ஆசிரியத்துறை, திருக்குறுந்தாண்டகம், எழுசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம், கலிவிருத்தம் முதலிய பாடல்களை இயற்றியுள்ளனர் என்பது மிக விரிவாக, நுட்பாக விளக்கப்பட்டுள்ளது. மூவர் தேவாரப் பதிகங்களில் சில பாடல்களை மட்டும் தேர்ந்தெடுத்து, அவற்றின் செய்யுளியல் தன்மைகளைத் திறம்பட விளக்கியுள்ளார் நூலாசிரியர். சிறந்த யாப்பியல் ஆராய்ச்சி நூல் இது.

நன்றி: தினமணி, 25/9/2016.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *