மூங்கில்
மூங்கில், சுஷில் குமார், யாவரும் வெளியீடு,விலை: ரூ.200
சுஷில்குமாரின் ‘மூங்கில்’ சிறுகதைத் தொகுப்பானது பலதரப்பட்ட மக்களின் வாழ்க்கையை அடிப்படையாகக் கொண்டது. தமிழ்ச் சிறுகதை, வாழ்க்கையிலிருந்து விலகி நகர்ந்துவரும் இந்தச் சூழலில் இந்தக் கதைகள் வாசிப்புக்கு ஆசுவாசம் அளிக்கின்றன. இந்தத் தொகுப்பில் 12 சிறுகதைகளும் வெவ்வேறு விதமான பின்னணியைக் கொண்டவை. சுந்தர ராமசாமி, நாஞ்சில்நாடன், ஜெயமோகன் கதைகளில் சித்தரிக்கப்பட்ட நாகர்கோவில் வட்டாரப் பகுதிகளின் யதார்த்தமான புதிய வாழ்க்கையை இந்தக் கதைகளில் பார்க்க முடிகிறது.
நாகர்கோவிலின் இளம் தலைமுறையினரின் வாழ்க்கை முறை, அவர்களது புழங்குமொழி எனத் தத்ரூபமான நவீன வாழ்க்கையை சுஷிலால் சித்தரிக்க முடிந்திருக்கிறது. திருவிதாங்கூர் சமஸ்தானத்துக்கு உரிய தொன்மங்களை சுஷில் தன் கதைகளில் சாதகமாகப் பயன்படுத்தியிருப்பது விசேஷமான அம்சம். பெரும்பாலான கதைகளின் மனிதர்கள் பலரும் தலைமுறை தலைமுறையாகத் தொடரும் கற்பிதங்களுக்காகத் தன் வாழ்க்கையைப் பறிகொடுப்பவர்களாக இருக்கிறார்கள். அதைப் பாவங்கள் எனலாம். பன்றி வேட்டைக்காரன், ஓவியர், லாட்ஜ் தரகர், பம்பாய்த் தொழிலாளி, பூசாரி எனப் பலவிதமான தொழில் பின்னணிகளில் புழங்கும் கதைகள் வாசிப்பு சுவாரஸ்யம் அளிக்கின்றன.
கதைகளை ஒரு வீடாகக் கொண்டால் சுஷில் அதில் சில அறைகளை மட்டுமே திறந்து காண்பிக்கிறார். ஆனால், திடகாத்திரமான அனுபவங்கள், எளிமையான மொழி ஆகிய பண்புகள் இந்தக் கதைகளை முக்கியத்துவம் மிக்கதாக்குகின்றன.
நன்றி: தமிழ் இந்து, 20/2/21
இந்தப் புத்தகத்தை ஆன்லைனில் வாங்க:https://dialforbooks.in/product/1000000031335_/
இந்தப் புத்தகத்தை வாட்ஸப்பில் ஆர்டர் செய்ய: 9500045609
இந்தப் புத்தகத்தை போன் மூலம் வாங்க: டயல் ஃபார் புக்ஸ் – 04449595818