ஒரு செக்யூலரிஸ்டின் வாக்குமூலம்
ஒரு செக்யூலரிஸ்டின் வாக்குமூலம், ஸ்ரீதர் சுப்ரமணியம், கோதை பதிப்பகம், விலை: ரூ.180
மதச்சார்பின்மை இந்திய அரசமைப்புச் சட்டத்தின் அடிப்படைக் கொள்கையா இல்லையா என்னும் விவாதம் தீவிரமாக முன்னெடுக்கப்படும் காலத்தில் அரசியலிலும் நிர்வாகத்திலும் மதச்சார்பின்மையைக் கடைப்பிடித்தல் என்னும் கோட்பாட்டின் முக்கியத்துவத்தையும், அதனால் உலகுக்குக் கிடைத்த பயன்களையும், மனித குலம் அடைந்த முன்னேற்றங்களையும் விளக்கும் நூல் இது.
மதச்சார்பின்மை என்றால் என்ன என்னும் அடிப்படை விளக்கத்துடன் தொடங்கும் இந்நூல், மதச்சார்பின்மையால் விளைந்த நன்மைகளை விளக்கும் ஐந்து அத்தியாயங்களுடன் நிறைவடைகிறது. இடையில் உள்ள அத்தியாயங்கள் மதச்சார்பின்மைக்கு நேரெதிர் கொள்கையான மத அடிப்படைவாதங்களை ஆய்வுக்கு உட்படுத்துகின்றன.
இந்து மதம், பேகனிய மதங்கள், இஸ்லாம், கிறிஸ்தவம் உள்ளிட்ட ஆப்ரகாமிய மதங்கள் ஆகியவற்றின் வரலாறு குறித்துச் சுருக்கமான, சிந்தனையைத் தூண்டும் அறிமுகங்கள் கிடைக்கின்றன. மதங்கள் குறித்து அதிகம் தெரிந்துகொள்ள விரும்புபவர்கள் அவை தொடர்பான நூல்களை வாங்கிப் படிப்பதற்கான ஆவலை இந்த அத்தியாயங்கள் அதிகரிக்கக்கூடும்.
மத நம்பிக்கையாளர்களுடன் மதச்சார்பின்மை உள்ளிட்ட நவீன ஜனநாயகக் கருத்தாக்கங்களை விவாதிக்க விரும்புகிறவர்கள் அனைவரும் கைக்கொள்ள வேண்டிய மொழியுடன் இந்த நூல் எழுதப்பட்டுள்ளது. நம்பிக்கைகள் சார்ந்த தொன்மங்களை வரலாறாக மாற்ற முனையும் முனைப்புகளுக்குப் பதிலடி கொடுக்கும் அதே வேளையில், நம்பிக்கையாக மட்டும் அவை தொடர்வதிலும், அந்த நம்பிக்கைகளின் அடிப்படையில் வழிபாடுகள் நடத்தப்படுவதிலும் யாருக்கும் எந்தப் பிரச்சினையும் இருக்க முடியாது என்பதைப் பல இடங்களில் வலியுறுத்துகிறார்.
இந்திய மக்களின் வரலாற்றை, இந்தியாவைத் தாழ்த்தும் நோக்கம் கொண்ட ஆங்கிலேயர்களும் இடதுசாரிச் சிந்தனையாளர்களும் தவறாக எழுதியுள்ளனர் என்கிற குற்றச்சாட்டை இந்தியாவின் பெரும்பான்மை மதவாதிகள் முன்வைக்கின்றனர். இந்தக் குற்றச்சாட்டை ஆதாரபூர்வமாக நிரூபிப்பதற்கான ஆய்வுகளுக்கு நிதியையும் உழைப்பையும் செலவிடத் தடுப்பது எது என்று நூலாசிரியர் எழுப்பும் கேள்வி சிந்திக்கத்தக்கது.
16-ம் நூற்றாண்டிலிருந்து மனித குலம் அடைந்த வளர்ச்சிகளுக்கும் நவீன மாற்றங்களுக்கும் உலக அளவில் அரசியலும் மதமும் பிரியத் தொடங்கியதே காரணம் என்பதை உரிய புள்ளிவிவரங்கள், தர்க்கங்களுடன் விவரிக்கப்பட்டுள்ளது. அறிவியல்பூர்வமான ஆய்வுக்கும் விவாதங்களுக்கும் முதன்மை முக்கியத்துவம் அளிக்கும் நவீனவாதச் சிந்தனை நோக்கில் இந்த நூல் எழுதப்பட்டுள்ளது. அதே நேரம், பட்டினியால் செத்துக்கொண்டிருந்த மனிதன், இன்று உடல்பருமனால் விளையும் நோய்களால் சாகிறான் என்று நவீன வளர்ச்சிகளின் தீய விளைவுகளையும் ஏற்றுக்கொள்கிறது; அவற்றுக்கான தீர்வானது நவீனத்தை மறுத்துப் பழங்காலத்துக்குத் திரும்புவதல்ல என்பதை அழுத்தம்திருத்தமாகப் பதிவுசெய்கிறது.
நன்றி: தமிழ் இந்து, 10/4/21
இந்தப் புத்தகத்தை ஆன்லைனில் வாங்க:https://dialforbooks.in/product/1000000031335_/
இந்தப் புத்தகத்தை வாட்ஸப்பில் ஆர்டர் செய்ய: 9500045609
இந்தப் புத்தகத்தை போன் மூலம் வாங்க: டயல் ஃபார் புக்ஸ் – 04449595818