முன்னேற்றம் உங்கள் கைகளில்
முன்னேற்றம் உங்கள் கைகளில், துடுப்பதி ரகுநாதன், வசந்தா பிரசுரம், பக். 192, விலை 125ரூ.
மூத்த எழுத்தாளரான இந்நூலாசிரியர் 500-க்கும் மேற்பட்ட சிறுகதைகள். கட்டுரைகள், குறுநாவல்களை படைத்துள்ளார். இவரின் ‘மாயமான காப்பகம்’ என்ற நாவல் 2013ல் வெளிவந்து, சிறந்த நாவலாக திருப்பூர் தமிழ்ச் சங்கத்தால் தேர்வு செய்து, விருது பெற்றது.
வாழ்க்கையில் முன்னேற விரும்புவர்களுக்கு, தன்னம்பிக்கையை ஏற்படுத்தி, ஊக்கத்துடன் செயல்படத் தூண்டும் விஷயங்களை தினமலர் மற்றும் பாக்யா போன்ற பத்திரிகைகளில் இந்நூலாசிரியர் எழுதிய தொடர் கட்டுரைகள் வாசகர்களின் வரவேற்பை பெற்றன. அவற்றில் சிறப்பான 62 கட்டுரைகள் இந்நூலில் தொகுக்கப்பட்டுள்ளன.
குறிப்பாக மனதின் சக்தி, பயம் போனால் ஜெயம் நிச்சயம், வெற்றிக்கு எமன் அகந்தை, யாரிடம் நட்பு கொள்வது, காலத்தே பயிர் செய்வது.. போன்ற கட்டுரைகள் இதில் அடக்கம். எங்கு, எந்த திசையில், எப்படி போகலாம் என்று வழி காட்டுவதுதான் சாலையில் உள்ள தகவல் பலகையின் வேலை. அதுவே நம்மை அங்கு கூட்டிக் கொண்டு போய்விடாது. அதுபோல் தான் இதுபோன்ற புத்தகங்கள். எனவே நமது இலக்கை அடைய நமது முயற்சி மிக மிக முக்கியம் என்ற அடிப்படைக் கருத்தை இந்நூலின் முதல் கட்டுரையில் பதிவு செய்துள்ளார்.
ஆன்ட்ராய்டு செல்ஃபோன்கள் இன்றைய இளைஞர்களின் விலை மதிக்க முடியாத நேரத்தை எப்படி விழுங்கி, அவர்களை செயலற்றவர்களாக்கி விடுகிறது என்பதை இரண்டாவது கட்டுரையில் விளக்கியுள்ளார். இப்படி நம் வெற்றிக்கு தடையாக உள்ள சில விஷயங்களை சில கட்டுரைகள் மூலம் சுட்டிக்காட்டி, பிறகு வெற்றிக்கான வழிகளையும், மனம் எழுச்சி பெறும் விஷயங்களையும் பல கட்டுரைகள் மூலம் ஆசிரியர் விளக்குவது, படிப்பவர்களுக்கு ‘நம்மால் முடியும்’ என்ற தன்னம்பிக்கையை ஏற்படுத்துவதை உணர முடிகிறது.
இந்தப் புத்தகத்தை ஆன்லைனில் வாங்க:http://www.nhm.in/shop/1000000026653.html
இந்தப் புத்தகத்தை வாட்ஸப்பில் ஆர்டர் செய்ய: 9500045609
இந்தப் புத்தகத்தை போன் மூலம் வாங்க: டயல் ஃபார் புக்ஸ் – 04449595818
-பரக்கத்.
நன்றி: துக்ளக், 18/4/2018.