முன்னோடிகள் ஆளுமைகள் சந்திப்புகள்
முன்னோடிகள் ஆளுமைகள் சந்திப்புகள்முன்னோடிகள் ஆளுமைகள் சந்திப்புகள், சூரியசந்திரன், எழில் பதிப்பகம், விலை 250ரூ.
அண்டா அன்பும்… டம்பளர் அன்பும்!
பேட்டிகள் படிப்பது பரவசமானது. அதுவும் பேட்டிகளின் தொகுப்பைப் படிப்பது பரவசங்களின் உச்சம். இலக்கியம், சமூகம், சூழலியல் என பல்துறை ஆளுமைகளை ஒருசேர ஒரே புத்தகத்தில் அறியக் கிடைப்பது உண்மையில் பொக்கிஷம் போன்றது. அத்தகைய பொக்கிஷத்தைக் கொடுத்துள்ளார் சூரியசந்திரன்.
இன்றைய இலக்கிய இதழ்களில் வெளிவரும் பேட்டிகளில் பலதும் சலிப்பை ஏற்படுத்துபவை. ஏனெனில் அவ பேட்டிகளாக, சந்திப்புகளாக இருப்பது இல்லை. எழுதித் தரப்பட்ட கட்டுரைகளுக்கு இடையில் சொருக்கப்பட்ட கேளிவகளாகவும், அதன் பதில்களாகவும் இருக்கின்றன.
ஆனால் சூரியசந்திரன் எடுத்துள்ள இந்தப் பேட்டிகளை நீங்கள் வாசிக்கும்போது, அந்த ஆளுமைகளோடு நாமே மீண்டும் உரையாடுவதைப் போல இருக்கும். நாமே சூரியசந்திரனாய் மாறி உரையாடுவது போல உணரலாம். இந்தப் புத்தகத்தின் வெற்றி இதுதான்.
“வரலாறு என்பது வெறும் மன்னர்கள், அவர்களுடைய கேளிக்கைகள், போர்கள், அந்தப்புரச் சூழ்ச்சிகள் ஆகியவை மட்டும் அல்ல. உண்மையில் வரலாறு சுவையானது. ஆவலைத் தூண்டக்கூடியது என்று சொல்கிறார்” ஆ.இரா. வேங்கடசலபதி.
“அன்பா இருக்கோம்னு காட்டிகறத்துக்கு காசுல்ல வேண்டியிருக்கு. நண்பன்கிட்ட அன்பா இருக்கேன்னா, அவனுக்கு நீ ஏதாச்சும் செய்யணும். கல்யாண வீடுகள்ல பெரிய அண்டா வாங்கிட்கிட்டுப் போனா பெரிய அன்பு உள்ளவன் மாதிரியும், சின்ன டம்பளர் வாங்கிட்டுப்போனா குறைஞ்ச அன்பு உள்ளவன் என்கிற மாதிரியும் இருக்கு. இந்தப் போலி மதிப்புகளுக்கு எல்லோரும் பலியாகிக்கிட்டே இருக்கோம். இது நம்ம வாழ்க்கையின் மிகப் பெரிய சோகம்” என்கிறார் ச. தமிழ்ச்செல்வன்.
‘‘திராவிடர் கழகத்தில் இருந்து அண்ணா விலகி, திராவிட முன்னேற்றக் கழகம் ஆரம்பித்தபோது அதற்கு நிதியுதவி அளித்த முதல் பத்துபேரில் நானும் ஒருவன்” என்கிறார் ‘பாரி நிலையம்’ செல்லப்பன்.
இப்படி எத்தனையோ செய்திகள். தமிழகம் அறிந்த ஆளுமைகள் பற்றி அறியாத தகவல்கள் கொட்டிக்கிடக்கின்றன. மொத்தம் 20 பேரின் பேட்டிகள் இதில் உள்ளன. அவர்கள் மூலமாக அவர்கள் வாழ்ந்த காலகட்டத்தையும் அறிகிறோம்.
-புத்தகன்.
நன்றி: ஜுனியர் விகடன், 26/4/2017.