நீயும் நானும்
நீயும் நானும், கோபால்தாசன், ஆரம் வெளியீடு, பக். 138, விலை 100ரூ.
கவிதையில் நெய்த கதை!
காதலைக் கவிதையில் சொல்லுவர், இவரோ கவிதையில் ஒரு இனிய காதல் கதையைத் தருகிறார். இம்முயற்சி பாராட்டுக்குரியதாகும். எளிய தமிழ் நடையில் யதார்த்தமான பின்னணியில் சென்னைக் காதலின் மணம் வீசுகிறது.
நடுத்தரக் குடும்பத்திலிருந்து வேலைக்குச் செல்பவர்களின் பின்னணியில் கதை பயணிக்கிறது. எளிய நடையில் வழக்கத்தில் உள்ள சென்னைத் தமிழ் மற்றும் ஆங்காங்கே ஆங்கிலம் கலந்த வழக்குச் சொற்களைப் பயன்படுத்தி இருப்பது, இப்புத்தகம் அனைவரும் படித்து இன்புறக்கூடிய ஒன்று என்று அடையாளப்படுத்துகிறது.
கதாபாத்திரங்களின் பெயர்களை எங்கும் குறிப்பிடாமல், ‘நான் அவள்’ அன்று கவிஞர் தன்னை முன்னிலைப்படுத்தி கதையை நகர்த்துவது மற்றுமொரு சுவாரஸ்யம். ‘முதல் முறையாக என் கையைப் பிடித்துக்கொண்டு அழுகிறாய்’ என்னும் வரிகளில் காதலின் கண்ணியமும், ‘இந்தியக் குடிகள் இந்தியக் குடிகாரனால் அசிங்கப்பட்டுக் கொண்டிருக்கிறது’ என்ற வரிகளில் தற்போதைய தமிழ் நாட்டின் நிலையும் வெளிப்படுகிறது.
பெண்கள் காதல் என்ற பெயரில் தாய் தந்தையை மறந்து தங்கள் வீடுகளை விட்டு வெளியேறுதல் தவறு என்றும் குடும்ப நலனுக்காகக் காதலை மறுத்து குடும்பப் பாரத்தை ஏற்கும் பெண்களும் உள்ளனர் என்றும் கதையின் இறுதியில் அழுத்தமாகப் பதிவு செய்திருக்கிறார். மொத்தத்தில், கவிஞர், கோபால்தாசனின், ‘நீயும் நானும்’ அனைவர் மனதிலும் இனிக்கக்கூடிய கவிதைக் கதை புத்தகமாகும்.
நன்றி:கல்கி, 30/4/2017.