முதல்வர் இவன்…
முதல்வர் இவன்… தமிழ்மறை தழைக்க வந்த ஸ்ரீ ராமானுஜர், முனைவர் கலியன் எதிராசன், வானதி பதிப்பகம், பக். 260, விலை 150ரூ.
வைணவர்கள் தினமும் ஸ்ரீ ராமானுஜரை வழிபடுவதை வழக்கமாக கொண்டவர்கள். 120 ஆண்டுகள் வாழ்ந்த அம்மகானின், 1000மாவது ஆண்டை ஒட்டி இந்நூல் வெளிவந்துள்ளது. ஸ்ரீ ராமானுஜரின் வரலாற்றை நாலாயிர திவ்யப் பிரபந்த பாசுரங்களின் அடிகளை உரைநடைபோல் எழுதி, விளக்கிய பான்மை நூலாசிரியரின் ஆழ்ந்த புலமைக்கு எடுத்துக்காட்டாகும்.
ஆழ்வார்கள், ஆசாரியர்கள் வைணவத்தை வளர்த்தது, முதல் பகுதியிலும், ஸ்ரீ ராமானுஜர் அவதரித்தது முதல் அவர் ஸ்ரீ பாஷ்யம் எழுதியது வரை, இரண்டாம் பகுதியிலும், ஸ்ரீராமானுஜர், ஸ்ரீரங்கத்தை விட்டு மேல் கோட்டைக்கு இடம் பெயர்தலை, மூன்றாம் பகுதியிலும், மீண்டும் ராமானுஜர் ஸ்ரீரங்கம் வந்து திருநாடு ஏறுதல் வரை, நான்காம் பகுதியிலும், ஆசிரியர் எளிய நடையில் விளக்கியுள்ளார்.
ஆளவந்தார் ஸ்ரீ ராமானுஜரைக் கண்டதும், ‘ஆம் முதல்வன் இவன்’ என்று அருளிச் செய்ததும், (பக். 58), யாதவப் பிரகாசர் ஸ்ரீராமானுஜரிடம் திரிதண்டியாதலும் (பக். 85), காஞ்சியிலிருந்து திருவரங்கம் வருவதும், (பக். 89), திருமலையில் எழுந்தருளியிருப்பது திருவேங்கடமுடையான் என்று உறுதி செய்வதும், (பக். 139), மேலக்கோட்டையில், டில்லி சுல்தானிடமிருந்து பெற்று வந்த செல்லப் பிள்ளையை எழுந்தருளிச் செய்ததும் (பக். 164), நாம் படித்துப் பயன் பெற வேண்டிய பகுதிகள்.
ராமானுஜரின் அணுக்கத் தொண்டர்களின் பட்டியல், 74 ஆச்சாரியர்களின் பட்டியல் முதலிய நூல் படிப்போருக்கு மிகவும் பயன்படும்.
-டாக்டர் கலியன் சம்பத்து.
நன்றி: தினமலர், 13/11/2016.