சீன இதிகாசக் கதைகள்
சீன இதிகாசக் கதைகள், ஏவி. எம், நஸீமுத்தீ, கிழக்கு பதிப்பகம், பக். 127, விலை 110ரூ.
மூவாயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்ட சீன இதிகாசக் கதைகள் கற்பனையில் சிறகடித்து, நம்பிக்கையில் கால் பதிக்கிறது. மனிதனின் அச்சம், ஆசை, ஆற்றாமை, கற்பனை, தனிமை, தன்னிரக்கம் என்ற உணர்வுகளை, இக்கதைகள் வெளிப்படுத்துகின்றன.
சீனாவின் சமூக, சமய வரலாற்றையும் இக்கதைகள் தொட்டுக்காட்டுகின்றன. மாயாஜலம், கற்பனை, வினோதம், அற்புதங்கள் இக்கதைகளில் இழையோடும், ஆனாலும், சீன மண்ணின் மரபுகளையும், நம்பிக்கைகளையும் அவை தாண்டி விடாது.
இந்தியாவுக்கு வந்த யுவான் சுவாங் என்ற சீனப் பயணி எழுதி வைத்த குறிப்புகளும், பேய், பூத வினோதங்களும் இக்கதைகளில் வருகின்றன. பாம்பு பெண்ணாக மாறி காதலிக்கும் சாகசக் கதைகள் மிகவும் விறுவிறுப்பானவை. திரைப்படமாகவும் இவை வந்துள்ளன.
அண்டப் புளுகன், ஆகாசப் புளுகன் பற்றிய முதல் கதையே இனிக்கிறது. குதிரைக்குட்டி வெள்ளி சாணம் போடுவதும், கிழிந்த ‘டிராகன்’ மயிரால் செய்யப்பட்ட சட்டையும் தந்து ஏமாற்றும் தந்திரமும் சிறப்பானது. புலியால் நரிக்கு காட்டில் கிடைக்கும் மரியாதை, ‘பயம்’ கதை.
சீனர்களின் ‘டிராகன்’ முத்திரை முடிவில் விளக்கம் தருகிறது. பொழுது போக்க மட்டுமல்ல, பல நீதிகளும் உணர்த்தும் சீனக் கதை நூல் இது.
-முனைவர் மா.கி. ரமணன்.
நன்றி: தினமலர், 13/11/2016.