நான் ரசித்த வாலி
நான் ரசித்த வாலி, திருநின்றவூர் சந்தானகிருஷ்ணன், வாலி பதிப்பகம், விலை 90ரூ
ரசிகனின் பார்வை
புலமை எதுவும் பெற்றிராத ஒரு இரசிகனின் பார்வையில் வாலியின் பாடல்களில் மிளிரும் எண்ணங்களின் பதிவே இது – என்று முன்னுரையில் குறிப்பிடுகிறார் நூலாசிரியர். தமிழ் திரைப்பட உலகை விரல் நுனியிலும் தன் ஆவணக்காப்பகத்திலும் வைத்திருக்கும் சந்தானகிருஷ்ணன் வாலியின் பாடல்களைப் பற்றிய தன் எண்ணங்களை நன்றாக பகிர்ந்து கொண்டுள்ளார்.
‘பூவரையும் பூங்கொடியே, பூமாலை போடவா’ என்ற பாடலில் ஆரம்பிக்கும் நூலாசிரியர் இப்பாடலின் சூழலை விவரித்து, பாடலின் நயங்களை எழுதுகிறார். அத்தோடு விடாமல் வாலியின் முதல் படமான அழகர் மலைக்கள்ளன் படத்துக்கு அடுத்து அவரது கவித்திறனை எடுத்துக்காட்டியது ‘இதயத்தில் நீ’ படத்தில் இடம்பெற்ற இந்தப்பாடல்தான் என்கிறார்.
அத்துடன் இப்பாடல் படம் பிடிக்கப்பட்ட இடம் பூண்டி அணைக்கட்டு என்ற தகவலையும் தருகிறார். தமிழ் திரைப்படப் பாடல்களில் சிறந்த ரசிகரும் இசையறிவும் மிக்கவரான நூலாசிரியர் தேர்ந்தெடுத்திருக்கும் பாடல்களுக்காகவும் அவர் தரும் பின்னணித் தகவல்களுக்காகவும் இந்நூலை வாசிக்கலாம்.
நன்றி: அந்திமழை, பிப்ரவரி.