நானும் சினிமாவும்
நானும் சினிமாவும், ஏவி.எம்.சரவணன், தினத்தந்தி பதிப்பகம், விலை 250ரூ.
சினிமா கனவுகளோடு சென்னையை எட்டிப்பார்க்கும் எந்த இளைஞனின் முயற்சியும், ஏவி.எம்.ஸ்டூடியோவை எட்டிப் பார்ப்பதில் இருந்துதான் தொடங்கும். பெருமைக்கு உரிய அந்த ஏவி.எம். என்ற மூன்றெழுத்துக்குச் சொந்தக்காரரான, ஏவி.மெய்யப்ப செட்டியாரின் மகனாகப் பிறந்து வளர்ந்து, அவரோடு இணைந்து நடந்த காலம் முதல், தானே சினிமாத் துறையில் தனித்து ஈடுபட்டு, அறுபது ஆண்டுகளைக் கடந்து இன்றும் தொடர்ந்து கொண்டிருப்பது வரையான அனுபவங்களை அற்புதமாகத் தொகுத்திருக்கிறார் ஏவி.எம்.சரவணன்.
பராசக்தி படத்தில் சிவாஜி கணேசன் அறிமுகமானபோது மிகவும் ஒல்லியாக இருந்தார். கூடவே ஒருவித பதட்டமும் இருந்தது. அதனால் சிவாஜியின் உடலைத் தேற்றவும், அவரை கவனித்துக் கொள்ளவுமாக தனியே ஒருவரை நியமித்தார் அப்பா. ஒரு மாதத்துக்குப் பின் சிவாஜி உடல் நன்கு மெருகேறி, பதட்டமும் தணிந்து நடிக்கத் தொடங்கியதும் அவரது ரசிகராகவே மாறிப்போனார் அப்பா.
எங்கள் நிறுவனத்தைப் பொறுத்தவரை, கதையைத் தேர்வு செய்த பிறகுதான், அதற்கேற்ற ஹீரோவைத் தேர்வு செய்வோமே தவிர, ஹீரோவுக்காக கதை எழுதுவது கிடையாது. முதன் முதலாக எம்.ஜி.ஆருக்காகவே ஒரு கதையை எழுதும்படி ஏ.சி.திருலோக சுந்தரிடம் சொன்னேன். நான் அதன் பிறகு எம்.ஜி.ஆரை சந்தித்துப் பேசினேன். அதை எம்.ஜி.ஆர். ஏற்று நடித்து பெரும் வெற்றிபெற்ற படம்தான் அன்பே வா.
போக்கிரிராஜா படத்தில் நடிக்க ரஜினியை அணுகியபோது அவர் என்ன சொன்னார் தெரியுமா? “என்னை யார்கூடேயும் கம்பேர் பண்ணாதீங்க… நான் தனி மனிதன். என் வழியிம் தனிவழி.
இப்படி பேசும் சினிமாவின் தொடக்க கால நடிகர் நடிகையர் முதல் இன்றுள்ள பிரபல ஹீரோ, ஹீரோயின்கள் வரை பலரைப் பற்றிய சுவையான பலருக்கும் தெரியாத விவரங்கள் ஏராளம். உலக உருண்டையைச் சுழற்றினால் அதிலுள்ள உலக நாடுகள் சுழன்று வருவதுபோல், இந்த நூலைப் புரட்டினால், ஏவி.எம்.சரவணன் அவர்களின் அறுபது ஆண்டுகால தமிழ் சினிமா அனுபவம், ஏவி.எம். எனும் மோனோகிம் உருண்டையில் சுவாரஸ்யமாய்ச் சுழன்று பக்கம் பக்கமாய் நகர்கிறது.
இந்தப் புத்தகத்தை ஆன்லைனில் வாங்க:http://www.nhm.in/shop/Naanum_Cinemavum.html
இந்தப் புத்தகத்தை வாட்ஸப்பில் ஆர்டர் செய்ய: 9500045609
இந்தப் புத்தகத்தை போன் மூலம் வாங்க: டயல் ஃபார் புக்ஸ் – 04449595818
-ஆர். நாகராஜன்,
நன்றி: குமுதம் 25/4/2018.