நகலிசைக் கலைஞன்
நகலிசைக் கலைஞன், ஜான் சுந்தர், காலச்சுவடு பதிப்பகம், விலை 130ரூ.
அனுபவக் கட்டுரைகளின் உண்மையும், ஆழமும் எப்போதும் சுவாரஸ்யமானவை. கற்பனையின் எல்லைக் கோட்டைக்கூட தொட்டுவிடாத அழகில் ஜான் சுந்தர் நகலிசைக் கலைஞர்களின் அனுபவங்களை, உடனிருப்பை ரத்தமும் சதையுமாக எழுதியிருக்கிறார்.
மெய் மறப்பதும், கவலை துறப்பதும் அனேகமாக திரைப் பாடல்களை கேட்கும் போது மட்டுமே நடக்கிறது. நகலிசைக் கலைஞர்களின் வாழ்க்கையின் சில பக்கங்களை துளி மிகையில்லாமல் செங்கல் சூளையின் வரிசை போல் கச்சிதமான அடுக்கில் கட்டுரைகள்.
இசையைப் புரிந்து கொள்வதும், அனுபவிப்பதும் ஜானின் எழுத்துகளில் தங்கு தடையின்றி நடக்கிறது. உண்மையிலேயே விளக்க முடியாத இடத்தில் இருக்கிற இசையை கவனம் ஈர்க்கும்படியாக எழுத முடிவதே பெரும் காரியம். மிகச் சிறிய புத்தகம். ஆனால் நிறைவில் மனம் பெருகி நிற்கிறது.
நன்றி: குங்குமம், 17/2/2017.