நகரப் பாடகன்
நகரப் பாடகன், குமாரநந்தன், காலச்சுவடு பதிப்பகம், விலை 225ரூ.
சிறு கதைக்குள் புதைந்திருக்கும் பெரும் வாழ்வு!
எதன் மீதும் புகார்களற்றதும் கசப்பற்றதுமான பார்வைதான் குமாரநந்தனுடையது. வெளிச்சத்தில் தென்படும் இருட்டும், வெப்பத்தின் அடியிலுள்ள குளிர்மையும், உள்ளில் காணும் வெளியும் ஒன்றாக உணரப்படுகின்றன. எளிமையான கதைகள்போல தோற்றம் தரும் குமாரநந்தனின் சிறுகதைகள் ஒரு கதைக்குள் பல உள்ளடக்கங்களைக் கொண்டிருக்கும் தன்மையுடையவை. அவரது கதையாடல்களில் யதார்த்தம், கனவுகள், அறிவியல், அமானுஷத் தருணம் போன்றவை பிரிக்க இயலாதவாறு இணைந்திருக்கின்றன.
ஒவ்வொன்றோடும் வாழ்வின் பகுதிகள் தீர்க்கமாகப் புனைந்து காட்டப்பட்டுள்ளன. அதனாலேயே, ஒவ்வொரு சிறிய அனுபவங்களும் பல அர்த்தங்கள் அளிப்பவையாக மாறுகின்றன.
‘நகரப் பாடகன்’ தொகுப்பிலுள்ள குமாரநந்தனின் கதைகள் தீர்வுகளைச் சொல்வதில்லை. கதையின் முடிவுகள் பிடிபடாத தன்மை உடையதாக இருக்கின்றன. அவர் கதைகளை முடிக்கும் இடத்திலிருந்து நாம் வேறு பல கதைகளைக் கிளைவிரித்துச் செல்லலாம். இரண்டு கதைகளை உதாரணமாகப் பார்ப்போம்.
‘தீர்ப்பு நாள்’ கதையில் ஆண் குழந்தை வேண்டும் என்னும் விருப்பத்துக்கு மாறாக இரண்டாவது குழந்தையும் பெண்ணாகவே பிறக்கிறது. மூன்றாவதும் பெண் குழந்தை. அந்தக் குழந்தை இறந்துபோகிறது. சிலர் அந்த இறப்பைக் கொலையாகக் கருதுகிறார்கள். குழந்தையின் இறப்புக்கு யாரும் காரணமில்லை என்று மற்றவர்களுக்கும் தனக்கும் நிரூபிப்பதற்காகக் காவல் துறையிடம் செல்கிறான் கதைசொல்லி. ஆனால், குழந்தையின் பிணம் தோண்டியெடுக்கப்பட்டு அது நஞ்சால் கொல்லப்பட்டதாகத் தெரியவருகிறது. அந்தக் கொலையைச் செய்தது யார் என்பது நேரடியாகக் கதையில் குறிப்பிடப்படவில்லை. நாம் கதையின் முடிவில் குழப்பமான மனநிலைக்குச் சென்றுவிடுகிறோம். கதைசொல்லியின் மனநிலை இந்தக் கதையில் பெண் குழந்தைக்கு ஆதரவாகவும், எதிரானதாகவும் குழப்பமுடனே வெளிப்படுகிறது. அந்தக் குழப்பம் வாசகர்களாகிய நமக்கும் தொற்றிக்கொள்கிறது. அந்தக் கதையின் முடிவு தரும் பூடகமான மனநிலையிலிருந்து நாம் வேறொரு விரிவான தளத்துக்கு அதை விரித்துச்செல்ல முடிகிறது.
ஒரு உதிரித் தொழிலாளியைப் பற்றிய யதார்த்த பாணியில் அமைந்த கதை ‘தீராத திருநாள்’. ஒரு திருவிழா இரவையும், பரபரப்போடு இயங்கும் பரோட்டா கடையின் புழுக்கத்தையும் உயிர்ப்போடுச் சித்தரிக்கிறது இந்தக் கதை. ஒரு திருவிழா இரவில், சொன்னதைவிட அதிகமாக வேலை வாங்கப்படும் பரோட்டா மாஸ்டர், தனக்குக் கிடைக்கும் சொற்பமான கூலியை எத்தகைய எதிர்ப்பையும் காட்டாமல் பெற்றுக்கொள்கிறார். பிறகு, தனது உடல் களைப்பையெல்லாம் மறந்துவிட்டு திருவிழா ஆடல் பாடல்களில் ஒன்றிவிடுகிறார். சம்பந்தமில்லாத குற்றத்தில் சம்பந்தப்படுத்தப்படுகிறார் பரோட்டா மாஸ்டர். கதையின் முடிவு ஒரு பதற்றமான சூழலுக்கு இட்டுச்செல்கிறது.
குற்றத்தில் சம்பந்தப்படுத்தப்பட்டு, சம்பாதித்த தொகையையும் தொலைத்துவிட்டு வெளியேறும் பரோட்டா மாஸ்டரின் வெறுமை நம்மையும் பீடித்துக்கொள்கிறது.
ஹோட்டலில் பரிமாறுபவர், துடைப்பவர், சமையல்காரரின் பின்னணி தொடர்பில் கதையில் ஒன்றிரண்டு வார்த்தைகள்தான் கூறப்படுகின்றன. கடை முதலாளியைப் பற்றி விழும் கூடுதலான சில சொற்களைக் கொண்டு நாம் ஒரு பெருங்கதையைக் கட்டியெழுப்பிக்கொள்ளலாம். இந்த உதிரிகளில் யாருக்குமே திருவிழா என்கிற கொண்டாட்டத்தில் நேரடித் தொடர்பு இருப்பதில்லை. பரோட்டா மாஸ்டர் அதன் விளிம்புக்குள் நுழைந்தாலும் அவனும் அதிலிருந்து பரிதாபகரமாக வெளியேற்றப்பட்டுவிடுகிறான்.
நாம் அன்றாடம் கடந்துபோகும் மனிதர்களெல்லாம் குமாரநந்தனின் கதைகளில் வெளிச்சம் பெறுகிறார்கள். ஒரு படைப்பாளியாக இவர் தன்னைக் கதாப்பாத்திரங்களுக்கும் கதைகளுக்கும் ஒப்புக்கொடுத்துவிடுகிறார். கிட்ட இருந்துகொண்டே விலகி நின்று பார்க்கும் தன்மை அழகியல்பூர்வமாக அவரது கதைகளில் வெளிப்படுகிறது.
கதையில் எழும் சில முக்கியமான முடிச்சுகளை குமாரநந்தன், ‘ஏனோ, எப்படியோ’ என்ற குறிப்புகளுடன்தான் கடந்துபோகிறார். கதைசொல்லிக்கும் படைப்பாளியான தனக்கும் புரிபடாத் தன்மையுடன் அதையெல்லாம் கடப்பதான தோற்றம் தருகிறது. இதனால், நாமும் அவற்றைப் பிரதிக்கு வெளியே வைத்து விரிக்க வேண்டியதாகிறது. சிறுகதை எனும் புனைவு வடிவத்தில் குமாரநந்தன் இன்னும் உயரப் பறப்பதற்கான சாத்தியங்கள் ‘நகரப் பாடகன்’ தொகுப்பில் தென்படுகின்றன
நன்றி: தமிழ் இந்து, 4-5-19..
இந்தப் புத்தகத்தை ஆன்லைனில் வாங்க:https://www.nhm.in/shop/1000000027333.html
இந்தப் புத்தகத்தை வாட்ஸப்பில் ஆர்டர் செய்ய: 9500045609
இந்தப் புத்தகத்தை போன் மூலம் வாங்க: டயல் ஃபார் புக்ஸ் – 04449595818