நமது கச்சத்தீவு
நமது கச்சத்தீவு,புலவர் செ.இராசு, வேலா வெளியீட்டகம், பக். 126, விலை 100ரூ.
தன் நாட்டின் நிலப்பரப்பை விரிவாக்கிக் கொள்ள வேண்டுமென்றால், வேறொரு நாட்டுடன் கடுமையாக போரிட்டு கைப்பற்றுவது தான் பண்டைய காலந்தொட்டு நடந்து வருகிறது.
ஆனால், இந்திய நாட்டின் பூர்வீக நிலப்பகுதியான ஒரு தீவோ, மிக எளிதாக இன்னொரு தீவு நாட்டிற்குத் தாரை வார்க்கப்பட்ட நிகழ்வு இன்றும் மண்ணின் மைந்தர்களை உறுத்திக் கொண்டிருப்பதன் விளைவே இந்நுால்.
வளர்ச்சிப்பாதையில் விரைந்து சென்று கொண்டிருந்த இந்தியா, இராமநாதபுர மாவட்டத்துக்குச் சொந்தமான, மீன்வளமும் கனிம வளமும் நிறைந்த கச்சத்தீவை, காரணமே இல்லாமல் இலங்கைக்குத் தாரை வார்க்க வேண்டிய நிர்ப்பந்தம் இன்றும் புரிபடாததாகவே இருப்பதாகக் கூறுகிறார், நுாலாசிரியர் கல்வெட்டறிஞர் புலவர் இராசு.
விக்டோரியா மகாராணியின் பிரகடனத்தில் குறிப்பிடப்பட்டு, சேதுபதி மன்னர்களின் வசம் இருந்த கச்சத்தீவு எவ்வாறு இந்திய வரைபடத்திலிருந்து நீக்கப்பட்டது எனும் தகவல், பல்லோருக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தக்கூடும்.
வரலாற்று ரீதியாக முத்துராமலிங்க சேதுபதி மன்னர் காலத்தில் (1767) இருந்தே, கச்சத்தீவு இந்தியாவின் இறையாண்மைக்குட்பட்ட முக்கியமான பகுதியாக கருதப்பட்ட நிகழ்வுகள் பலவும் நுாலில் இடம்பெற்றிருக்கின்றன.
கச்சத்தீவுப் பிரச்னை இந்திய பார்லிமென்டில் முறையாக எடுத்துக்கொள்ளப்படாத நிலையில், இலங்கை அத்தீவின் மீது உரிமை கொண்டாடியதைச் சுட்டுவதோடு, கச்சத்தீவு தாரை வார்க்கப்பட்டபோது, அப்போதிருந்த அரசியல் தலைவர்கள் மற்றும் தமிழக பார்லிமென்ட் உறுப்பினர்களின் பெயர்களும் (பக்., 32) நுாலில் தரப்பட்டுள்ளன.
சிற்சில எல்லைக்கோடு நகர்வுகளுக்கே ராணுவப்போர் புரியும் நாடுகள் இருக்க சொந்தத் தீவையே எவ்வித காரணமும் இன்றி தானமாக வழங்கிய ஆதங்கம் நுாலில் வெளிப்படுகிறது. படித்தறிய வேண்டிய நுால்.
– மெய்ஞானி பிரபாகரபாபு
நன்றி: தினமலர், 7/10/2018.
இந்தப் புத்தகத்தை ஆன்லைனில் வாங்க:http://www.nhm.in/shop/1000000027242.html
இந்தப் புத்தகத்தை வாட்ஸப்பில் ஆர்டர் செய்ய: 9500045609
இந்தப் புத்தகத்தை போன் மூலம் வாங்க: டயல் ஃபார் புக்ஸ் – 04449595818