நன்மாறன் கோட்டைக் கதை

நன்மாறன் கோட்டைக் கதை, இமையம், க்ரியா வெளியீடு, விலை 225ரூ.

பெண்களின் பிரச்சினைகளை, அவர்களின் வெவ்வேறு மன இயல்புகளை முன்னிறுத்தி எழுதுவதில் இமையம் தனித்துவமிக்கவர். இத்தொகுப்பிலுள்ள ஆறு கதைகள் பெண்களை மையப்படுத்தியவையே. ஆதிக்க சாதி வெறிக்குக் கணவனைப் பலிகொடுத்துவிட்டு மூன்று பிள்ளைகளுடன் ஊரை விட்டே செல்ல முடிவெடுத்த ‘நன்மாறன் கோட்டைக் கதை’யின் செல்வமணி, இன்னொரு பெண்ணுடன் இருந்த தொடர்பைத் தட்டிக்கேட்டதற்காக ஊரறிய தன்னை அடித்து அவமானப்படுத்திய தன் கணவனை அதே ஊரறிய தன் கணவனின் ஒட்டுமொத்த ஆண்பிம்பத்தையும் குலைத்துப்போடும் ‘தலைக்கடன்’ கதையின் சீனியம்மா, ‘பொட்டச்சி சோறு திங்கறதுக்கு ஒலகத்தில இருக்கிற ஒரே வழி சீலய தூக்கிக்காட்டுறது மட்டும்தானா சார்?’ என்று தன்னைத் தேடி தன் வீட்டுக்கு வரும் முதலாளியிடம் பேசும் சித்தாள் சாந்தா, டவுன் பஸ்ஸில் பிடித்த இடத்தைக் காப்பாற்றி வைப்பதற்கான போராட்டத்தையும் ஆண்களின் பாலியல் சீண்டல்களையும் மாதவிலக்குப் பிரச்சினையையும் ஒன்றாக எதிர்கொள்ளும் ‘ஆலடி பஸ்’ கதையில் வரும் பிரியங்கா, வீட்டிலிருந்த நகை திருடுபோனதற்காகக் கணவனிடம் மாட்டடி வாங்கியதோடு கோயிலில் பிராது மனு கட்டிப்போட்டால் நகை கிடைத்துவிடும் என்கிற நம்பிக்கையோடு காத்திருக்கும் தங்கமணி, தான் விரும்பிய செட்டியாரோடு ஒரு முறை கொண்ட உறவின் காரணமாகவே தன்னைச் செட்டிச்சியாக உணரும் பணியாரக்காரம்மா… இவர்கள் அனைவருமே துயரத்தின் வெவ்வேறு முகங்கள். ஒவ்வொரு நாளும் போராடியே வாழ்ந்துதீர்க்க வேண்டும் என்ற நிலையில் இருப்பவர்கள்.

தங்கள் வாழ்வின் அடுத்த நகர்வு என்ன என்பதைத் தீர்மானிக்க இயலாதவர்கள். இவர்களைப் புரட்சியாளர்களாகவோ பெண்ணியம் பேசுபவர்களாகவோ இமையம் படைக்கவில்லை. அல்லது இவர்கள் வழியே தான் பார்க்க விரும்பும் பெண்ணுலகைக் கற்பனை செய்துபார்ப்பதற்கோ போதனை சொல்வதற்கோ இமையம் முயலவில்லை. குடும்பத்திலும் சமூகத்திலும் பெண்கள் எப்படி இருக்க வேண்டும் என ஆண்கள் வரையறுத்து வைத்திருக்கும் எல்லைக்கோட்டுக்குள் நின்று இப்பெண்கள் தங்கள் வாழ்க்கையை எப்படி ஒவ்வொரு நாளும் நகர்த்திக்கொண்டிருக்கிறார்கள் என்பதை வாழ்வின் அத்தனை முரண்களோடும் பதிவுசெய்திருக்கிறார்.

கட்சிக்காகத் தொடக்க காலம் முதல் உழைத்து கட்சியை வளர்த்தவர்களெல்லாம் புறந்தள்ளப்பட்டு பணம் இருப்பவர்களுக்கு மட்டுமே தேர்தலில் நிற்க வாய்ப்பு வழங்கப்படுகிற நிலையை விளக்கும் ‘கட்சிக்காரன்’ கதையும், தன் கட்சி சார்பாகத் தேர்தலில் நிற்பவனாக இருந்தாலும் அவன் தாழ்த்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்தவன் என்றால் சொந்தக் கட்சியைச் சேர்ந்தவர்களே அவனைத் தோல்வியடைய வைப்பதற்காகத் திட்டமிடும் சாதிய மனநிலை தேர்தலில் எவ்வாறு தொழிற்படுகிறது என்பதை விவரிக்கும் ‘நம்பாளு’ கதையும் நிகழ்கால அரசியல் பிரதிபலிப்புகளாக அமைந்துள்ளன.

இவருடைய கதைமாந்தர்கள் கதை நெடுகிலும் பேசிக்கொண்டே இருக்கிறார்கள். சலிப்பும் அலுப்பும் ஏற்படுத்தாத இந்த உரையாடல் வழிதான் காட்சிகள் விரிந்து கதை நகர்கிறது. இத்தொகுப்பிலுள்ள கதைகள் ஒடுக்கப்பட்டோருக்கும் பெண்களுக்கும் எதிராக இச்சமூகம் உருவாக்கி வைத்திருக்கும் பல்வேறு கட்டமைப்புகளை வெளிச்சப்படுத்தி இவர்கள் வாழ்க்கை ஏன் இப்படி இருக்கிறது என்கிற கேள்வியை வாசகருக்குள் எழுப்புவதுடன், எதையுமே செய்ய இயலாத கையாலாகாத்தனத்தையும் சுட்டிக்காட்டுகின்றன.

– சுடர்விழி, உதவிப் பேராசிரியர்.

நன்றி: தமிழ் இந்து, 28/9/19.

இந்தப் புத்தகத்தை ஆன்லைனில் வாங்க:https://www.nhm.in/shop/1000000029788.html

இந்தப் புத்தகத்தை வாட்ஸப்பில் ஆர்டர் செய்ய: 9500045609

இந்தப் புத்தகத்தை போன் மூலம் வாங்க: டயல் ஃபார் புக்ஸ் – 04449595818

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *