நீ பாதி நான் பாதி

நீ பாதி நான் பாதி, பலரது கட்டுரைத் தொகுப்பு, அந்திமழை, பக். 128, விலை 110ரூ.

இரு வேறு மனங்கள் இணைந்து மேற்கொள்ளும் இல்லறத்தில், மகிழ்ச்சியான மண வாழ்வின் தேடல்களிலேயே பலரது நாட்களும் நகர்கின்றன.

கருத்தொருமிப்பு இல்லாமல் மேற்கொள்ளும் இல்லற வாழ்க்கை, கருத்து மாறுபாடுகளின் கன பரிமாணத்திற்கேற்ப துன்பத்தில் வீழ்ந்து விடுகிறது. குறைந்த சதவீதத்தினரே இதில் வெற்றி கண்டு, அன்பான இல்லற வாழ்க்கைக்கு முன்னுதாரணமாகத் திகழ்கின்றனர்.

ஒருவரை ஒருவர் நன்கு புரிந்து நேசித்து வாழும் சாமானியர்கள் பலரை, அன்றாட வாழ்வில் கண்டு வியப்பதுண்டு. தனி நபர்களின் தரமான இல்லறமே சிறந்த கலாசாரமாகப் போற்றப்பட்டு, சமூகத்தின் மதிப்பையும், நாட்டின் மதிப்பையும் உலக அரங்கில் உயர்த்துகின்றன.

சமூகத்தில் மிகவும் அறிந்தவர்களாக விளங்கும் நல்லகண்ணு, சகாயம் ஐ.ஏ.எஸ்., சாலமன் பாப்பையா, டாக்டர் நாராயண ரெட்டி போன்ற பலரின் சொந்த வாழ்க்கை அனுபவங்களையும், பொதுவான நல்வாழ்க்கைச் சூத்திரங்களையும் இந்நுாலில் பகிர்ந்துள்ளனர்.

நேர்மையான அரசியல் வாழ்வுக்கு உதாரணமாக விளங்கி, தன் மனைவி ரஞ்சிதம் அம்மாளின் தியாகத்தை வெளிப்படுத்தும் தோழர் நல்லகண்ணு, அலுவல்கள் தொடர்பான வழக்குகளைச் சந்தித்தது போன்ற கொந்தளிப்பான தருணங்களில், தன்னை ஆதரித்த மனைவி விமலாவைக் கொண்டாடும் சகாயம், பண்டிகைக்குப் புதிய துணி வாங்கவும் வசதியின்றி இருந்த காலத்தில் துணை தந்த மனைவி ஜெயபாய் பெயரை உயர்த்திப் பிடிக்கும் சாலமன் பாப்பையா என்று பகிரங்கமாகக் கூறுவது சிறப்பானது. அனைவரின் அனுபவங்களும் மனத்தைத் தொடுகின்றன.

மாறுபட்ட விதத்தில் வெளிப்படுத்தும் ஓஷோ, சமூகத்தில் அதிகரித்து வரும் கணவன்- – மனைவி மோதல்கள் மற்றும் திருமண ஏற்பாடுகள் எனச் சில கட்டுரைகளும் நுாலில் உண்டு. அத்தனையும் பலருக்கும் பாடங்கள்!

ஒருவர் மீது ஒருவர் கெட்டியான அன்பு வைத்து வாழும் தம்பதியரில் குடிசைகளிலும், ஓட்டு வீடுகளிலும், அடுக்ககங்களிலும் வருவாய்க்கேற்ப அமைதியாக வாழ்க்கை நடத்தும் இல்லத்தரசிகள் பெருமையும் உள்ளது.

மாண்பான இல்லவள் கிடைத்தால், வாழ்க்கையில் வேறு என்ன தேவை என்ற குறள் வாசிப்பின்போது நினைவுக்கு வரக்கூடும். படிக்கலாம்.

– மெய்ஞானி பிரபாகரபாபு

நன்றி: தினமலர், 4/2/2018

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *