நீங்களும் படிக்கலாம்
நீங்களும் படிக்கலாம், அழகிய சிங்கர், விருட்சம், பக். 90, விலை 60ரூ.
முழுநேர வாசகன் என்பது மிகவும் உயர்ந்த விஷயம் என்று இந்திய இலக்கியம் என்ற புத்தகத்தில் குறிப்பிடுகிறார், க.நா.சு., வாழ்நாள் முழுவதும் படிப்பதிலேயே தன்னை ஐக்கியப் படுத்திக் கொண்டவர் அழகிய சிங்கர்.
சென்ற ஆண்டில் கிட்டத்தட்ட, 3,000 பக்கங்களுக்கு மேல் அவர் படித்த, 20 புத்தகங்களின் விபரங்கள் தான், ‘நீங்களும் படிக்கலாம்’ என்ற இந்த சிறிய நூல். எல்லாரும் புத்தகங்கள் வாசிக்க வேண்டுமென்ற நல்ல எண்ணத்தில் எழுதப்பட்ட கட்டுரைகள் தான் இவை.
எஸ்.ராமகிருஷ்ணன் எழுதிய, ‘சஞ்சாரம்’ என்ற நாவல் குறித்த பதிவுகள் சிறப்பானவை. மலர்வதி எழுதிய, ‘தூப்புக்காரி’ என்ற நாவல், ‘யுவ புரஸ்கார்’ விருது பெற்ற நாவல். ‘தலித் எழுத்தை ஒரு தலித் எழுதுவது தான் சிறப்பாக அமையும்.அந்த வகையில், துப்புக்காரி என்ற நாவல், ஒரு தலித்தால் எழுதப்பட்ட நாவல்’ என்று குறிப்பிடுகிறார்.
‘நடை வெளிப் பயணம்’ என்ற அசோகமித்திரன் புத்தகத்தைப் படித்து முடித்தேன். அசோகமித்திரனின் கதைப் புத்தகத்தைப் படித்தாலும், கட்டுரைப் புத்தகத்தைப் படித்தாலும் பெரிதாக வித்தியாசம் தெரியது.
கட்டுரைகளைக் கூட கதைகள் மாதிரி தான் அவர் எழுதுவார் என்று கூறுகிறார். சிறந்த புத்தகங்களை அறிமுகப்படுத்தும் சிறந்த புத்தகம் இது!
-எஸ்.குரு.
நன்றி: தினமலர், 25/12/2016.