நிலைத்து நிற்கும் வாழ்க்கைத் தத்துவங்கள்
நிலைத்து நிற்கும் வாழ்க்கைத் தத்துவங்கள், ஓஷோ, தமிழில்: சிவதர்ஷினி, கண்ணதாசன் பதிப்பகம், பக்.414, விலைரூ.300.
சமூகத்தையோ உலகத்தையோ மாற்றும் அபிப்ராயம் கிடையாது. காரணம் சமூகம் என்பது மாயை என்ற அடிப்படையில் தனிமனிதனை மையமாக வைத்து அவனை மாற்றுவதற்கான ஓஷோவின் கருத்துகளின் தொகுப்பே இந்நூல்.
தனிமனிதர்கள் இந்து, முகமதியர், கிறிஸ்தவர், பொதுவுடைமைவாதி என எந்தச் சார்புடனும் இருக்கக் கூடாது. அப்படியிருந்தால் மனிதர்கள் முன் கூட்டியே ஒரு தீர்மானத்துக்கு வந்துவிடுவார்கள். தேர்ந்தெடுக்கப்பட்ட ஒரு பாதையில் மட்டுமே கவனத்தைச் செலுத்துவார்கள்.
எங்கெங்கும் தவறான அபிப்ராயங்கள் நீக்கமற நிறைந்திருக்கின்றன. சமூகம், அரசியல், மதம், தத்துவம் என்று தவறான அபிப்ராயங்கள் அடுக்கடுக்காக அமைந்திருக்கின்றன. இதனால் ஒருவர் உண்மையைத் தெரிந்து கொள்ள முடியாது. தவறான அபிப்ராயங்கள் இல்லாத மனமே தூய்மையான மனம்.
எதிர்காலம் பற்றி அதிகம் கற்பனைகள் தேவையில்லை. எப்போதும் நிகழ்காலத்தில் தங்கியிருத்தல் என்ற காரியத்தை மட்டும் ஒருவர் செய்ய வேண்டும். அது கூடுதல் விழிப்புணர்வு ஏற்பட வழி வகுக்கும் – இவ்வாறான கருத்துகளின் அடிப்படையில் உலகின் சகல விஷயங்களையும் இந்நூல் விளக்குகிறது.
சமூக மனிதன் என்பதை மறுக்கிறது. சமூக மனிதனாக இருந்து, ஏதேனும் கொள்கை, இலட்சியம், எதிர்காலத் திட்டம் என்று இயங்கிக் கொண்டிருக்கும் மனிதர்களை அவற்றில் இருந்து விடுவித்து, புறஉலகின் செயல்பாடுகளைப் பற்றி அவர்கள் எந்த அக்கறையும் கொள்ளாமல், மனதை மையமாகக் கொண்டு, நிகழ்காலத்தில் மட்டும் கவனம் செலுத்தி அவர்கள் வாழ வேண்டும் என்று வலியுறுத்துகிறது இந்நூல்.
நன்றி: தினமணி, 19/3/2018.