பரிசலில் ஒரு பயணம்
பரிசலில் ஒரு பயணம், ஜி. மீனாட்சி, சாந்தி நூலகம், பக். 96, விலை 80ரூ.
வீரிய விதைகள்!
எழுத்தாளரும் பத்திரிகையாளருமான ஜி. மீனாட்சியின் இன்னொரு பயணம் சிறுவர் கதைகள் அடங்கிய ‘பரிசலில் ஒரு பயணம்’ சிறுவர் இலக்கியத்துக்கான பங்களிப்பும் கவன ஈர்ப்பும் குறைந்து வரும் இச்சூழலில், இது நல்ல முயற்சி எனலாம்.
விளையும் பயிரை முளையிலே திருத்தி ஐம்பதில் புலம்பாமல் ஐந்திலேயே செதுக்கி… கதை ஒரு நல்ல உளிதான். நூலின் முன்னுரையில் எழுத்தாளர் லதா ராமகிருஷ்ணன் “இந்நூலின் மூலம் தனது சமூகக் கடமையைத் திறம்படச் செய்து இருப்பவர்” என்று சிலாகிக்கிறார்.
ஆதாரங்களுடன் கோடிட்டுக் காட்டுகிறார். அது அசலான உண்மைதான். இந்நூலில் இடம்பெற்றிருப்பது மொத்தம் 11 கதைகள். ‘எது வெற்றி?’ ‘படிப்புக்கு அப்பால்’, ‘தேடல்’ என்று கதைக்கு அவர் வைத்திருக்கும் தலைப்பே சான்றாக முன்நிற்கிறது.
கதையின் முடிவில் ‘இதனால் அறிவிக்கப்படும் நீதி யாதெனில்’ என்ற செயற்கை தொனியில் ஒரு நீதியைத் திணிக்காமல் இயல்பாகக் காட்சியினூடே போகிறபோக்கில் நீதிகளை ஈரமான நிலத்தில் வீரிய விதைகளைத் தூவிவிட்டுப் போகிறார். சூழலுக்கு பொருந்தாத மன்னர், வீரபிரதாபங்கள், அதிவிஞ்ஞான கற்பனை என்றெல்லாம் கதைவிடாமல் குழந்தைகள் அறிந்த உலகிலிருந்து குழந்தையாக மாறி குழந்தைக்குக் கதை சொல்லி புத்தியைச் செம்மையாக்குகிறார் ஜி.மீனாட்சி.
சிறுவர் இலக்கியத்திலும் தனக்கான இருக்கை தயார் செய்துள்ளார். சிறுவர்கள் உள்ள வீட்டில் அவர்கள் பார்வையில் வைக்க வேண்டிய, பரிசளிக்கக்கூடிய நூல் எனலாம்.
-அமிர்.
நன்றி: கல்கி, 15/5/2016.