அறம் பொருள் இன்பம்

அறம் பொருள் இன்பம், சாரு நிவேதிதா, அந்திமழை வெளியீடு, விலை 200ரூ.

அரிதாரம் பூசிக்கொள்ளாத எழுத்து!

ருத்ராட்சம் கட்டிக்கொண்டு ஏராளமான பூனைகள் பேனா பிடித்தபடி வளைய வருகிற காலகட்டத்தில் சாரு நிவேதிதா முற்றிலும் வித்தியாசமானவர். எதையும் வெளிப்படையாகப் பேசுகிறவர். எப்படியோ இவரைப் பற்றி ஒரு பிம்பம் அல்லது மாயை படிந்துவிட்டது. ‘மன்னியுங்கள் எனக்கு இருக்கும் பிம்பத்துக்குத் துளியும் சம்பந்தமில்லாத ஆள் நான். பழகினால் தெரிந்துகொள்வீர்கள்’ என்கிற சாருவைப் புரிந்து கொள்ளவும் பழகவும் அண்மையில் வெளியாகியுள்ள ‘அறம் பொருள் இன்பம்’ என்கிற நூலே போதுமானது.

இவருடைய ‘ஸீரோ டிகிரி’ நாவலைத் தம்மால் படித்துப் புரிந்து கொள்ள முடியவில்லை என்று சொல்கிற ஒரு வாசகருக்கு சாரு சொல்கிற ஆலோசனை, “என்னுடைய கட்டுரைத் தொகுப்புகளைப் படித்துவிட்டு நாவலுக்குள் நுழையலாம்” என்பதே. புனைகதைகளைவிடவும் ஒரு படைப்பாளியின் ஆன்மாவைப் புரிந்துகொள்ள, அனுபவம் சார்ந்த கட்டுரைகளே உதவ முடியும் என்பதற்குக் கேள்வி – பதில் வடிவில் வெளியாகியுள்ள இந்தக் கட்டுரைகளின் தொகுப்பே சான்றாக விளங்கும். ‘எத்தனை விஷய ஞானம்! எத்தனை அனுபவம்!’ என்று புருவம் உயர்த்த வைக்கிற எழுத்து. இந்த இருநூற்றம்பது பக்க நூலை ஒரே மூசசில் படித்துவிட முடியும். அப்புறம் இரவு முழுவதும் உறக்கம் பிடிக்காமல் அதைப் பற்றியே சிந்தித்துக் கொண்டிருக்கவும் முடியும்.

வெள்ளைக்காரன் விட்டுப்போய் நாம் இன்னும் கட்டிக்கொண்டு அழுகிற கல்வி முறையை வன்மையாகச் சாடுகிறார். ‘சிறார்களுக்கும் இளைஞர்களுக்கும் அருவி தெரியவில்லை, நதி தெரியவில்லை, விண்மீன்கள் தெரியவில்லை, தென்றல், மலை, பூமி, சங்கீதம் எதுவுமே தெரியவில்லை. காலையில் கேட்கும் குயிலின் சப்தத்தை உணரும் சிறுவர்கள் இப்போது யாரேனும் இருப்பார்களா என்று தெரியவில்லை’ என்கிற அங்கலாய்ப்பில் இருக்கும் வலியை உணரமுடிகிறது.

சூரிய நமஸ்காரம், சம்ஸ்கிருத இலக்கியங்கள், சங்கப்பாடல்கள் என்று மட்டும் தன்னைக் குறுக்கிக்கொள்ளாமல் சமையல் கட்டுக்குள்ளும் தம்முடைய ஆளுமையைப் பிரகடனப்படுத்துகிற எழுத்து பொறாமைப்பட வைக்கிறது. ஸ்ரீ ரங்கத்து அக்கார அடிசில், பிராமணக் குடும்பங்களிலேயே இன்றைக்கு ‘வழக்கொழிந்து’ போய்விட்ட ‘வேப்பிலைக் கட்டி’யின் மகத்துவம் ஒரு பக்கம் என்றால் முட்டையில் செய்கிற பக்குவங்களின் ஆராய்ச்சி வேறு. ‘புல்ஸ் ஐ’ போடக்கற்றுத் தருகிற தொழில்நுட்பம்.

‘தலித்துகள், பிராமணர்களைப்போல் இஸ்லாமியர்களும் வெறுத்து ஒதுக்கப்படுகிறார்கள்’ என்றும், ‘தலித்துகளுக்கு உள்ள சட்டப்பாதுகாப்புகூட பிராமணர்களுக்கு இல்லை’ என்றும் சாரு நிவேதிதா முன்வைக்கிற சிந்தனைகளைத் திறந்த மனதோடு அங்கீகரிப்பது கிடக்கட்டும், தாங்கிக்கொள்ளக்கூட எத்தனை போல் முடியும்?

1873இல் பிறந்து 1954இல் மறைந்த பிரெஞ்சு நாட்டுப் பெண் எழுத்தாளர் காலத் என்பவரைப் பற்றிய கட்டுரையும் சரி, யாரோ ஒரு ஈரோட்டு விவாசயின் விளம்பரம் நாடாத மனிதாபிமான மருத்துவ உதவியைப் பற்றிய குறிப்பானாலும் சரி, பண்டரீபுரத்து பக்தர் ராக்காவைப் பற்றிய சித்திரமானாலும் சரி, சாரு காட்டுகிற கோணம் அற்புதமானது.

மனம் திறந்த குறைந்தபட்சமான ஒப்பனை கூட இல்லாத எழுத்து. சாரு நிவேதிதாவின் இந்தத் தொகுப்பைப் போல் வேறு எதுவும் இதுவரை என் கண்ணில் பட்டதில்லை.

-சுப்ர. பாலன்.

நன்றி: கல்கி, 8/5/2016.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *