பயங்கரவாதி என புனையப்பட்டேன்

பயங்கரவாதி என புனையப்பட்டேன், மொகமது ஆமிர்கான், நந்திதா ஹக்ஸர், தமிழில் அப்பணசாமி, எதிர் வெளியீடு, விலை 200ரூ.

பயங்கரவாதி யார்?

‘குண்டுவெடிப்பில் தொடர்புடைய பயங்கரவாதி கைது’ என்று கறுப்புத்துணியால் மூடப்பட்டு போலீஸாரால் இழுத்துச் செல்லப்படும் நபர்களைப் பார்க்கும்போது ‘இரக்கமில்லா பாவி’ என்றெல்லாம் கோபப்படுவோம். ஆனால் அப்படி இழுத்துச் செல்லப்படுபவர்களில் நிரபராதிகளும் உண்டு என்பதையும், போலீஸாரோ, உளவுத் துறையினரோ நினைத்தால் யாரை வேண்டுமானாலும் இதுபோன்ற வழக்குகளில் சிக்க வைக்க முடியும் என்பதையும் நாம் அறிந்திருப்பதேயில்லை. அப்படி சிக்கவைக்கப்பட்ட டெல்லி இளைஞர் மொகமது ஆமிர்கானின் வலி நிறைந்த அனுபவங்கள்தான் இந்தப் புத்தகம்.

காங்கிரஸ் அபிமானி ஒருவரின் மகனாகப் பிறந்தவர் ஆமிர்கான். பாகிஸ்தானைச் சேர்ந்தவரைத் திருமணம் செய்த தனது சகோதரியைப் பார்க்க கராச்சி செல்ல விசா கோரி, 1990?களின் இறுதியில் விண்ணப்பிக்கிறார். அந்தச் சமயத்தில் ‘குப்தாஜி’ எனும் உளவுத் துறை அதிகாரி அவரிடம் ஒரு உளவுப் பணியை ஒப்படைக்கிறார்.

இந்தியாவை நேசிக்கும் 19 வயதேயான ஆமிர் கான் நாட்டுக்காக அந்தப் பணியைச் செய்ய ஒப்புக்கொள்கிறார். ஆனால், பாகிஸ்தானில் தனக்கு அளிக்கப்படும் ரகசிய ஆவணங்கள், அந்நாட்டு அதிகாரிகள் வசம் சிக்கிவிடும் என்று அஞ்சி, அவற்றை வீசியெறிந்துவிடுகிறார். டெல்லி திரும்பியதும் குப்தாஜி உள்ளிட்ட அதிகாரிகளின் வெறுப்புக்கு ஆளாகிறார்.

உளவுத்துறையினரால் கடத்தப்பட்டு சித்ரவதைகளை அனுபவிக்கிறார். உச்சக்கட்ட கொடுமையாக, 1997-ல் டெல்லி உள்ளிட்ட இடங்களில் நடந்த குண்டு வெடிப்புகளில் தொடர்புடையவர் என்று இவர் மீது பழி போடப்படுகிறது. நீண்ட சட்டப் போராட்டத்துக்குப் பிறகு வெளிவந்த ஆமிர் முன்வைக்கும் உண்மைகள் நமது மனசாட்சியை உலுக்குபவை!

-சந்தனார்.

நன்றி: தி இந்து, 9/9/2017.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *